உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதல் கட்ட லோக்சபா தேர்தலில் பலம் காட்டும் பெரிய தலைகள்! மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள் -போட்டி

முதல் கட்ட லோக்சபா தேர்தலில் பலம் காட்டும் பெரிய தலைகள்! மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள் -போட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : லோக்சபா தேர்தலின் முதல் கட்ட ஓட்டுப்பதிவில், பல முக்கிய தலைவர்கள் களத்தில் உள்ளனர். எட்டு மத்திய அமைச்சர்கள், இரண்டு முன்னாள் முதல்வர்கள், ஒரு முன்னாள் கவர்னர் போட்டியிடுவதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத் தேர்தல் நாளை நடக்க உள்ளது. தேர்தல் முடிவுகள், ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளன.நாடு முழுதும், 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 102 தொகுதிகள், முதல் கட்டத்தில் தேர்தலை சந்திக்க உள்ளன.பா.ஜ., முன்னாள் தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி, மஹாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கிஉள்ளார்.

கடும் போட்டி

கடந்த 2014 தேர்தலில், ஏழு முறை எம்.பி.,யான விலாஸ் முதேம்வாரை, 2.84 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். கடந்த 2019 தேர்தலில், தற்போதைய காங்., மாநில தலைவர் நானா படோலை, 2.16 லட்சம் ஓட்டுகளில் வென்றார்.மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அருணாச்சல் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2004ல் இருந்து மூன்றாவது முறையாக இவர் போட்டியிடுகிறார். இவர், முன்னாள் முதல்வரும், அருணாச்சல் காங்., தற்போதைய தலைவருமான நபோம் துகியை எதிர்கொள்கிறார்.மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனவால், அசாமின் திப்ருகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக அவர் உள்ளார்.உத்தர பிரதேசத்தின் முஜாபர்நகர் தொகுதி, ஜாதி அரசியலுக்கு புகழ்பெற்றது. இங்கு, மத்திய அமைச்சர் சஞ்சிவ் பலியான், மும்முனை போட்டியை எதிர்கொள்கிறார். சமாஜ்வாதியின் ஹரிந்திரா மாலிக், பகுஜன் சமாஜின் தாரா சிங் பிரஜாபதியின் கடும் போட்டியை சந்திக்கிறார்.இரண்டு முறை எம்.பி.,யான மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு -- காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றியை எதிர்பார்க்கிறார்.ராஜ்யசபா எம்.பி.,யான மத்திய அமைச்சர் புபேந்திர யாதவ், ராஜஸ்தானின் ஆல்வார் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்.,கின் எம்.எல்.ஏ.,வான லலித் யாதவை எதிர்கொள்கிறார்.

சவாலாக இருப்பர்

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால், ராஜஸ்தானின் பிகானீர் தொகுதியில், காங்கிரசின் முன்னாள் அமைச்சர் கோவிந்த் ராம் மெஹ்வாலை சந்திக்கிறார்.மத்திய மீன்வளத் துறை இணையமைச்சர் முருகன், தமிழகத்தின் நீலகிரி தொகுதியில், தி.மு.க.,வின் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜாவை சந்திக்கிறார். ராஜ்யசபா எம்.பி.,யான முருகன் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், ஏழு முறை வென்ற தமிழகத்தின் சிவகங்கை தொகுதியில், அவருடைய மகனும், தற்போதைய எம்.பி.,யுமான கார்த்தி போட்டியிடுகிறார். அவருக்கு, பா.ஜ.,வின் தேவநாதன் யாதவ், அ.தி.மு.க.,வின் சேவியர் தாஸ் கடும் சவாலாக இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தின் 39 தொகுதிகளும், முதல் கட்டத்தில் தேர்தலை சந்திக்கின்றன. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கோவையில் தி.மு.க.,வின் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க.,வின் சிங்கை ராமச்சந்திரனை எதிர்கொள்கிறார்.தெலுங்கானா முன்னாள் கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தின் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2019 தேர்தலில், தி.மு.க.,வின் கனிமொழியை எதிர்த்து துாத்துக்குடியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கனிமொழி இந்த தேர்தலிலும், துாத்துக்குடியில் போட்டியிடுகிறார்.மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் சொத்தாக மாறிய சிந்த்வாரா தொகுதியில், அவருடைய மகன் நகுல்நாத் மீண்டும் போட்டியிடுகிறார்.

நேரடி மோதல்

கடந்த 1980ல் இருந்து, ஒன்பது முறை கமல்நாத் இங்கு வென்றுள்ளார். 2019 தேர்தலில், மாநிலத்தில் உள்ள 29 தொகுதிகளில், 28ல் பா.ஜ., வென்றது. ஆனால், இந்த தொகுதியில் நகுல்நாத் வென்றார்.வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் இரண்டு தொகுதிகளில் ஒன்றான மேற்கு திரிபுரா, முதல் கட்டத்தில் தேர்தலை சந்திக்கிறது. இங்கு, பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப், காங்கிரஸ் மாநில தலைவர் ஆஷிஷ் குமார் சாஹா நேரடியாக மோதுகின்றனர்.காங்கிரஸ் லோக்சபா துணை தலைவரும், முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகனுமான கவுரவ் கோகோய், அசாமின் காலிபாபார் தொகுதியில், 2014 மற்றும் 2019ல் வென்றார். தற்போது, ஜோர்ஹாட் தொகுதியில், பா.ஜ.,வின் தபோல் குமார் கோகோயை எதிர்கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை