கோவை : உற்பத்தித் துறையில் கோலோச்சி வரும் கோவை, சமீப காலமாக ஐ.டி., துறையிலும் பெரும் வளர்ச்சியை முன்னெடுத்துள்ளது. கோவைக்கு பன்னாட்டு நிறுவனங்களின் தொடர் வருகையால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது.இந்தியாவின் ஐ.டி., தலைநகராக பெங்களூரு கருதப்படுகிறது. சில மாதங்களுக்கு முன், பெங்களூருவில் நிலவிய கடும் தண்ணீர் தட்டுப்பாடு, பன்னாட்டு நிறுவனங்களை வேறு நகரங்களுக்கு திசை திருப்பியுள்ளது. மெட்ரோ நகரமான சென்னையைத் தாண்டி, இரண்டாம் நிலை நகரங்களை நோக்கி, ஐ.டி., நிறுவனங்கள் வரத்துவங்கியுள்ளன. குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை, கோவைக்குத் திரும்பியுள்ளது.போதுமான தண்ணீர், திறன்மிகு இளைஞர்கள் என, கோவை பன்னாட்டு நிறுவனங்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இதனால், ஐ.டி., நிறுவனங்கள் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. ஐ.டி., பார்க்குகளும் அமைக்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு
சமீபத்தில் விளாங்குறிச்சியில், ரூ.158 கோடி மதிப்பில், 2.94 லட்சம் சதுர அடி பரப்பில் எல்காட் தொழில்நுட்ப பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனால், 3,500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.மும்பையைச் சேர்ந்த, ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனம், கோவையில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. டான்னி ஷெல்டர்ஸ் நிறுவனம், கோவையில் 7 லட்சம் சதுர அடியில் ஐ.டி., பார்க் அமைக்கப்போவதாக அறிவித்துள்ளது.ரத்தினம் மற்றும் எல் அண்டு டி பூங்காக்களும் ஐ.டி., துறையின் வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டியிருக்கின்றன. இவை தவிர, ஆம்பர் குழுமம், வின்ப்ரா நிறுவனம் ஆகியவையும் கோவையில் கால்பதிக்கின்றன.இப்பட்டியலில் புதிய வரவாக, பன்னாட்டு நிறுவனமான பிரான்ஸின் 3டி என அழைக்கப்படும் டசால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம், கோவையில் தனது அலுவலகத்தைத் திறந்துள்ளது. 3டி துறையில் உலகின் முன்னணி நிறுவனமான டசால்ட், 'பி.எல்.எம்.,' எனப்படும் புராடக்ட் லைப்சர்க்கில் மேனேஜ்மென்ட் சேவையிலும் முன்னணி நிறுவனமாக உள்ளது.இந்நிறுவனத்தில் குளோபல் கேபபிலிட்டி மையமும் (ஜி.சி.சி.,) இருக்கும் என்பதால், இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுக்கும் உறுதுணையாக இருக்கும்.
அதிக உத்தரவாதம்
கோவையில் ஆண்டுக்கு, 20 ஆயிரம் இன்ஜி., பட்டதாரிகள் உருவாகும் நிலையில், கணிசமானவர்கள் ஐ.டி., துறை சார்ந்தவர்களாக உள்ளனர். புதிய நிறுவனங்களின் வரவு, இந்த இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு அதிக உத்தரவாதம் அளிக்கிறது. ஒரு காலத்தில் இளைஞர்களின் பெரும் கனவாக இருந்த நிறுவனங்கள், தற்போது கோவையிலேயே தங்கள் அலுவலகங்களைத் துவக்குவது, கோவை ஐ.டி., துறையின் தலைநகராக உருவெடுக்கும் என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.