உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  தாசில்தாரை விரட்டி விரட்டி கடித்த நாய்கள்: சிவகங்கை நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் நோட்டீஸ்

 தாசில்தாரை விரட்டி விரட்டி கடித்த நாய்கள்: சிவகங்கை நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் நோட்டீஸ்

சிவகங்கை: சிவகங்கையில், டூ - வீலரில் சென்ற போது, தெருநாய்கள் விரட்டி விரட்டி கடித்ததில், பலத்த காயமடைந்த தேர்தல் பிரிவு தாசில்தார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில், கலெக்டர் பொற்கொடி நேரடி ஆய்வு செய்து, நாய்களை கட்டுப்படுத்த தவறிய நகராட்சி கமிஷனர், கால்நடைத்துறை இணை இயக்குநருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில், 200க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. நேற்று முன்தினம் காலை, கலெக்டர் அலுவலக திடலில், தேர்தல் பிரிவு தாசில்தார் மேசியதாஸ், 55, என்பவர் நடைபயிற்சி மேற்கொண்டார். பின், டூ - வீலரில் திருப்புத்துார் சாலையில் சென்ற போது, சில நாய்கள் அவரை விரட்டி விரட்டி கடித்தன. இதில், பலத்த காயமடைந்த அவர் கலெக்டர் பொற்கொடிக்கு தகவல் தெரிவித்தார். பின், அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கலெக்டர், திருப்புத்துார் சாலையில் திரியும் நாய்கள் குறித்து நேரடி கள ஆய்வு செய்தார். நகராட்சி கமிஷனர் அசோக்குமாரை, மொபைல் போனில் கலெக்டர் அழைத்தார். அவர், கலெக்டரின் அழைப்பை ஏற்கவில்லை. அதிருப்தியடைந்த கலெக்டர், நேரடியாக நகராட்சி அலுவலகம் சென்று, அங்கிருந்த அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். மேலும், நாய்களுக்கு தடுப்பூசி போடத் தவறிய நகராட்சி கமிஷனர் அசோக்குமார், கால்நடைத்துறை இணை இயக்குநர் நந்தகோபால் ஆகியோர் மூன்று நாட்களில் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பினார். நகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், ''நகரில் இருக்கும் 200 நாய்களில், 135 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி விட்டோம். திருப்புத்துார் சாலையில் தாசில்தாரை கடித்த இரு நாய்களை பிடித்து நேற்று உடனே ஊசி செலுத்தி விட்டோம். விரைவில் அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ