நேபாளம் போல் நம் நாடு மாறாமல் இருக்க அரசியல்சாசன கட்டமைப்பே காரணம்: தலைமை நீதிபதி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதி, கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள் குறித்து உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. ஒன்பதாம் நாள் விசாரணை, நேற்று நடந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ''மசோதாக்களுக்கு, கவர்னர்கள் ஒப்புதல் வழங்குவதை அவர்களுக்கான அதிகாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அது அவர்களுடைய கடமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால், தான் உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்துள்ளது. ''இந்த வழக்கு தொடர்பாக, இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. அப்படி போராடி கிடைத்த இந்த வெற்றி, எந்த வகையிலும் நீர்த்துப் போய் விடக்கூடாது. எனவே, இந்த விஷயத்தில் ஜனாதிபதி எழுப்பி இருக்கும் கேள்விகள் அனைத்தையும் நிராகரிக்க வேண்டும்,'' என, வாதிட்டார். மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''பல மாநிலங்களும், கவர்னரை தபால்காரராக நினைக்கின்றனர். அது தவறான அணுகுமுறை. கவர்னரும் மாநில சட்டசபையில் ஒரு அங்கம் தான். எனவே, ஒரு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது, அவர் தலையிடக்கூ டாது என்று கூற, யாருக்கும் அதிகாரம் கிடையாது,'' என்றார். அப் போது பேசிய தலைமை நீதிபதி கவாய், ''நம்முடைய நாட்டின் அரசியல் அமைப்பு குறித்து, பெருமை கொள்கிறோம். ஏனென்றால் நம் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிகிறோம். ' 'அதுபோன்ற சூழல்கள், நம் நாட்டிலும் ஏற்படாமல் இருப்பதற்கு, நம் அரசியல் சாசனத்தின் கட்டமைப்பு தான் காரணம். நாம் மிக சிறந்த ஜனநாயகம்,'' என பெருமிதத்துடன் கூறினார். நேற்றைய அலுவல் நேரம் முடிந்ததை அடுத்து, இன்று இறுதி விசாரணை க்காக ஒத்தி வைக்கப்பட்டது. -டில்லி சிறப்பு நிருபர்-