சமாளிக்க முடியல; ரொம்ப சவாலா இருக்கு: குவியும் குப்பையால் அலறுது அரசு துறை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தினமும், 15,545 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுவதாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தெரிவித்துள்ளார்.இந்திய நகரங்களில், திடக்கழிவு மேலாண்மை என்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதனால், நிலத்தடி நீரும், நீர்நிலைகளும் மாசடைகின்றன; மண் வளமும் பாதிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திடக்கழிவு மேலாண்மை தொடர்பான வழக்கை விசாரித்து வரும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, இது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி, 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டது.அதன்படி, தமிழக நகராட்சி நிர்வாக துறை செயலர் தாக்கல் செய்த அறிக்கை: தமிழகத்தில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றின் மக்கள் தொகை 3.50 கோடி. இது. தமிழக மக்கள் தொகையில் 48.40 சதவீதம். தமிழக நகர்ப்புற உள்ளாட்சிகளில் இருந்து தினமும், 15,545 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, குப்பை கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கு தரம் பிரிக்கப்பட்டு, மட்கும் குப்பை உரமாக மாற்றப்படுகின்றன.மட்காத குப்பையில் இருந்து பிளாஸ்டிக் உள்ளிட்டவை பிரிக்கப்பட்டு, மறு பயன்பாட்டுக்காக தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுகின்றன. திடக்கழிவுகளை கையாள்வது சவாலானதாக உள்ளது. வீடு வீடாக சேகரிக்கும் கழிவுகளில், 311 டன் குப்பை கிடங்குகளுக்கு செல்வதில்லை. அதுபோல கிடங்குகளில் 2,332 டன் குப்பை தரம் பிரிக்கப்பட்டு, உரிய முறையில் அகற்றப்படுவதில்லை.சென்னை கொடுங்கையூரில், 269 ஏக்கரில் 73 லட்சத்து 91,672 லட்சம் கன மீட்டர் குப்பை குவிந்துள்ளது. கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற மாநகரங்களிலும் இதே நிலைதான். மட்கும் குப்பை, மட்காத குப்பை, ஆபத்தான குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும், பொது இடங்களில் குப்பை கொட்டக்கூடாது என்றும், மக்களிடம் விழிப்புணர்வு வந்தால் தான் மாற்றங்கள்உருவாகும்.அதற்காக கழிவு மேலாண்மை குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, 'துாய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.