இரட்டை இலை சின்னம் விவகாரம்; சி.வி.சண்முகம் ஆஜராகி விளக்கம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
இரட்டை இலை சின்னம் குறித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டுமென்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வரும் வரையில், இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்று கோரி, சூரியமூர்த்தி என்பவர் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்திருந்தார். இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் விளக்கத்தையும் கேட்டு, இந்த விவகாரம் குறித்து நான்கு வாரத்திற்குள் முடிவெடுக்கும்படி உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில், சம்பந்தப்பட்டோர் தங்களது கருத்தையும், விளக்கத்தையும் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தர விட்டிருந்தது.இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில் விளக்கமளிக்க, ராஜ்யசபா எம்.பி., யான சி.வி. சண்முகம், டில்லி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நேற்று வந்திருந்தார். 'மனுதாரர் சூரியமூர்த்தி என்பவர் தனிக்கட்சி ஆரம்பித்து, அ.தி.மு.க.,வுக்கு எதிராகவே போட்டியிட்டவர் என்பதால், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என அவர் வலியுறுத்தினார்.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜலட்சுமியோ, 'அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு, இப்போதும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர் செல்வமே இருப்பதால், சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும்' என வலியுறுத்தினார். மனுதாரர் சூரிய மூர்த்தியோ, 'உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படாமல் பொதுச்செயலர் பதவியில் பழனிசாமி இருப்பதாக கூறி, அவர் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்ககூடாது' என வலியுறுத்தினார்.மூன்று தரப்பு விளக்கத்தையும் கேட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள், பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய தரப்பினர், டிச. 30லும், மனுதாரர் அடுத்த மாதம் 13ம் தேதியும் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளிக்கும்படி அறிவுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது டில்லி நிருபர் -