உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தொகுதிகளில் உயிர்வாழும் இறந்தவர்கள்; வாக்காளர் பட்டியலில் அவலம்

தொகுதிகளில் உயிர்வாழும் இறந்தவர்கள்; வாக்காளர் பட்டியலில் அவலம்

திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளில், சுருக்கமுறை திருத்தத்துக்கு பின்னரும், இறந்த வாக்காளர் 4 ஆயிரம் பேர் பட்டியலில் தொடரும் நிலையே உள்ளது. இவர்களை நீக்குவதற்கான பணிகளை தேர்தல் அதிகாரிகள் செவ்வனே மேற்கொள்ளவேண்டும்.இரட்டை பதிவு மற்றும் இறந்த வாக்காளர்களை நீக்கம் செய்து, செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் தேர்தல் கமிஷன் முனைப்பு காட்டிவருகிறது. வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, கடந்த அக்டோபர் 29 முதல் நவ., 28ம் தேதி வரை சுருக்கமுறை திருத்தம் நடைபெற்றது.திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. பி.எல்.ஓ.,க்களின் கள ஆய்வில், எட்டு தொகுதிகளில் மொத்தம் 16 ஆயிரம் பேர் இறந்த வாக்காளர்களாக கண்டறியப்பட்டு, பட்டியலிடப்பட்டனர்.சுருக்கமுறை திருத்தத்தில், இறந்த வாக்காளர் பெயர் நீக்கம் செய்வதற்காக, குடும்பத்தினரிடமிருந்து, நேரடியாகவும், ஆன்லைனிலும் படிவம் - 7 பூர்த்தி செய்து பெறப்பட்டது. சுருக்கமுறை திருத்தத்தில், இறந்த வாக்காளர் அனைவரையும் நீக்க விண்ணப்பிக்கப்படவில்லை; பெயர் நீக்கத்துக்கு 12,847 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.அதாவது, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் (பி.எல்.ஓ.,) கள ஆய்வில் கண்டறியப்பட்டவர்களிலேயே, இன்னும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறந்த வாக்காளர்கள், பட்டியலில் உயிர்வாழும் நிலையே உள்ளது.

முனைப்பு காட்டியும் முடியவில்லை

மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: இறந்த வாக்காளரை பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்வதற்கு, இறப்பு சான்று கட்டாயமாகிறது. சுருக்கமுறை திருத்தத்தில், நீக்கத்துக்கு விண்ணப்பிக்காததற்கு, இறப்பு சான்று பெறாததும் காரணமாக இருக்கலாம். பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாறுதல்கள் செய்து, வரும் ஜனவரி 6 ம் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அடுத்தநாள் முதலே, ஆன்லைனில் திருத்தத்துக்காக விண்ணப்பிக்கலாம். அப்போது, விடுபட்ட இறந்த வாக்காளர் பெயர்களை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் துவக்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
டிச 06, 2024 13:13

இறந்தும் கொடுத்தான் சீதக்காதி என்பார்கள். அதுபோல இறந்தும் வோட்டுப்போட்டான் கேள்விப்பட்டீர்களா? அதுதான் இது.


அப்பாவி
டிச 06, 2024 11:31

அவிங்களா? எலக்‌ஷன் சமயத்தில் விண்ணுலகிலிருந்து வந்து 2000 ரூவா வாங்கிட்டு ஓட்டுப் போயிட்டு திரும்ப போயிருவாங்ஜ. நம்பள் யாரையும் அடுத்த எலக்‌ஷன் வரை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க.


புதிய வீடியோ