உச்சவரம்பு தளர்த்தப்பட்டாலும் நிலம் கிடைப்பதில் தாமதம்; வீட்டுவசதி திட்டங்கள் காத்திருப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை:பொதுத் துறை நிறுவனங் களுக்கு, அரசு புறம்போக்கு நிலங்களை ஒதுக்குவதில், குறிப்பிட்ட சில உச்சவரம்புகள் தளர்த்தப்பட்டாலும், பல இடங்களில் வீட்டுவசதி திட்டங்களுக்கு தேவையான நிலம் பெற முடியாத நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் வாயிலாக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசாணை
இதற்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான நிதியை அளித்தாலும், திட்டங்களை செயல்படுத்த நிலம் பெறுவதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த, தனியார் நிலங்களை கையகப்படுத்தினால் செலவு அதிகரிக்கும். அது, நிதி வரம்புக்குள் திட்டங்களை செயல்படுத்த தடையாக அமைந்து விடும். அதனால், அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை குறிவைத்து தான், பொதுத் துறை நிறுவனங்கள் திட்டங்களை செயல்படுத்துகின்றன. ஆனால், நிலம் பெறுவதற்கான நடைமுறைகள் மிகவும் சிக்கலாக இருந்தன. அதை எளிமைப்படுத்தும் வகையில், 2020ல் ஒரு அரசாணையை வருவாய் துறை பிறப்பித்தது. இதன்படி, பொதுத் துறை நிறுவனங்களுக்கு தேவைப்படும் அரசு புறம் போக்கு நிலங்களை வழங்குவதற்கான உச்ச வரம்புகள் தளர்த்தப்பட்டன. ஆட்சேபகரமான மற்றும் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களை, பொதுத் துறை நிறுவனங்களுக்கு வழங்குவதில், கலெக்டர்களே முடிவு எடுக்கலாம் என, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்னும், வீட்டுவசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிலம் கிடைப்பதில் பிரச்னை ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இது குறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 2020ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையால், நிலம் பெறுவதில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும் என நினைத்தோம். ஆனால், அதில் நிலத்தை பயன்படுத்துவதற்கான நுழைவு அனுமதியை மட்டும் தான் கலெக்டர்கள் வழங்குகின்றனர். நடவடிக்கை
அந்த குறிப்பிட்ட நிலத்துக்கான தொகையை இறுதி செய்வது, அதை வசூலித்து உரிமையை ஒப்படைப்பது போன்ற விஷயங்களில் கலெக்டர்கள் முடிவு எடுப்பதில்லை. இதனால், வீடு கட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பகுதிகளில், விற்பனை பத்திரம், பட்டா வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. தமிழகம் முழுதும் புறம்போக்கு நிலங்களை, பொதுத் துறை நிறுவனங்களுக்கு உரிமை மாற்றம் செய்வது தொடர்பான பிரச்னையை தீர்க்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அப்போது தான் இதில், முழுமையான தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.