உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கூட்டணி விஷயத்தில் ஆணவமாக நடந்தாரா நாகேந்திரன்?

கூட்டணி விஷயத்தில் ஆணவமாக நடந்தாரா நாகேந்திரன்?

தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் சரியாக நடந்திருந்தால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விலகி இருக்க மாட்டார் என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் குற்றஞ்சாட்டினார். அதற்கு பதிலளித்து பேசிய நாகேந்திரன், தினகரன் குற்றச்சாட்டு அபாண்டமானது என கூறியுள்ளார். இருவரும் மாறி மாறி அளித்த பேட்டிகள்: மதுரையில் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பன்னீர்செல்வம் விலகியது குறித்து, ஆளாளுக்கு ஒரு விமர்சனம் வைக்கின்றனர். ஆனால், அவரிடம் தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் முறையாக பேசியிருந்தால், இந்தப் பிரச்னை நடந்தே இருக்காது. பன்னீர்செல்வத்திடம் உரிய முறையில் பேச வேண்டும் என பலமுறை வலியுறுத்தினேன். ஆனால், பா.ஜ.,வினர் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. அதன்பின் தான், இவர்களை நம்பி பிரயோஜனமில்லை என முடிவெடுத்து, கூட்டணியில் இருந்து பன்னீர்செல்வம் விலகி விட்டார். யாரை எதிர்த்து, நான் அ.ம.மு.க., கட்சியை ஆரம்பித்தேன் என்பது அனைவருக்கும் தெரியும். இணக்கமாகச் சென்று தான், எம்.எல்.ஏ., - எம்.பி., ஆக வேண்டும் என்றால், அப்படியொரு பதவியே தேவையில்லை. அப்படி நினைக்கக்கூடிய கூட்டம் எங்களுடையது அல்ல. தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை இருந்தவரை, தே.ஜ., கூட்டணியை நன்றாக கையாண்டார். ஆனால், நாகேந்திரன் தலைவராக வந்த பின், நிலைமை தலைகீழ். பன்னீர்செல்வம் விவகாரத்தில் நல்ல முடிவெடுங்கள் எனச் சொல்லி, நாகேந்திரனிடம் பேசினேன். 'பன்னீர்செல்வம் உங்களுக்கு போன் செய்திருக்கிறார்; மெசேஜ் செய்திருக்கிறார். ஆனால், இல்லை என்று சொல்கிறீர்களே' என அவரிடம் கேட்டேன். சமாளித்து பதில் சொன்னாரே தவிர, உருப்படியாக எதுவும் சொல்லவில்லை. அதன்பின் தான், பன்னீர்செல்வம் ஆதாரங்களை வெளியிட்டார். ஆனால், என்னிடம் கேட்டிருந்தால், நானே பிரதமரை சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கிக் கொடுத்திருப்பேன் என நாகேந்திரன் ஆணவமாக பொய் சொல்லி உள்ளார். அது, எங்கள் தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை; அதனால், கூட்டணியை விட்டு வெளியேறி விட்டோம். நடிகர் விஜயின் அரசியல் நுழைவு குறித்து பேசியது உண்மை. தமிழக அரசியலில் அவர் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார். அதைத்தான் சொன்னேனே தவிர, அவரோடு இணையப் போவதாக சொல்லவில்லை. ஆனால், வம்படியாக விமர்சிக்கின்றனர். கோவையில் தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணியில் மாற்று கட்சியினரை ஒருபோதும் மரியாதை குறைவாக நடத்தியதில்லை. 'தே.ஜ., கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விலகியதற்கு நான் தான் காரணம்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் என் மீது குற்றச்சாட்டு வைக்கிறார். அப்படியொரு அபாண்டமான குற்றச்சாட்டை, அவர் என் மீது எதை வைத்து சுமத்துகிறார் என தெரியவில்லை. தே.ஜ., கூட்டணியில் இருந்து பன்னீர்செல்வத்தை தொடர்ந்து, தினகரனும் வெளியேறி இருக்கிறார். அதன்பின், அவர் வைக்கும் எந்த குற்றச்சாட்டுக்கும் நான் பொறுப்பேற்கவும் முடியாது; பதிலளிக்கவும் தேவையில்லை. அவர் ஏன் என் மீது குற்றச்சாட்டு வைத்து பேசுகிறார் என தெரியவில்லை. பா.ஜ., ஒரு போதும் யாரையும் குறைத்து மதிப்பிடுவதும் இல்லை; பேசுவதும் இல்லை. பா.ஜ.,வைச் சேர்ந்தோர் எப்போதுமே கூட்டணியை இணக்கமாக கொண்டு செல்லத்தான் விரும்புவர். தமிழகத்தை ஆண்டு கொண்டு, ஒட்டுமொத்த மாநிலத்தையும் சுடுகாடாக்கிக் கொண்டிருக்கும் தி.மு.க., ஆட்சியை அகற்ற, எல்லாரும் ஒன்று சேர வேண்டும் என்று, போகுமிடமெல்லாம் பேசி வருகிறேன். அப்படியிருக்கும் போது, கூட்டணி கட்சியினரை புறக்கணிக்க வேண்டிய அவசியமே இல்லை. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் விமர்சனம் குறித்து, நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. பா.ஜ., என்றைக்கும் அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாது. தினகரனும், பன்னீர்செல்வமும் பேசி வைத்துக் கொண்டு, என் மீது குற்றஞ்சாட்டுவது போல் தெரிகிறது. நான் யாரிடமும் இதுவரை ஆணவமாக நடந்து கொண்டதில்லை. அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும் என்பதே பா.ஜ.,வின் விருப்பமும் கூட. துக்கடா கட்சியாக அ.ம.மு.க.,வை நினைக்கவில்லை. தே.ஜ., கூட்டணியில் தான் அ.ம.மு.க., தொடர வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால், தினகரனின் நிபந்தனை என்னவென்றே தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

pakalavan
செப் 08, 2025 12:20

அதிமுகவுக்கு சேவகம் செய்வது நைனார்


pakalavan
செப் 08, 2025 07:15

நயினார் நல்லா வாசிக்கிறார்


Sun
செப் 07, 2025 15:43

எடப்பாடி முதல்வராவதை தடுக்கவும் பா.ஜ.க ,அ.தி.மு.க கூட்டணிக்கு உள்ளுக்குள் இருந்தே சிலர் வேட்டு வைக்கவும் நயினார் நாகேந்திரன் பதவியை காலி செய்யவும் முயற்சி செய்கின்றனர். எல்லாம் அந்த அண்ணாமலையாருக்கே வெளிச்சம்.


Venugopal S
செப் 07, 2025 13:13

நயினார் நாகேந்திரன் ...நிலைமையை விட மோசமாக உள்ளதே!


D Natarajan
செப் 07, 2025 10:04

சசி, ttv, ops அனைவரும் ஊழலில் திளைத்தவர்கள். ஒருவகையில் இவர்களின் அரசியல் ஜாதி அடிப்படையில் உள்ளது. சசி மீது சிபிஐ நடவடிக்கை உள்ளது. எனவே இவர்களை ADMKவில் சேர்க்கக்கூடாது. சேத்தால் DMK வெற்றி பெற்று விடும்.


Arul Narayanan
செப் 07, 2025 08:48

நயினாருக்கு இந்த பதவி பழனிசாமியால் கிடைத்தது. அதனால் அவர் தனது கட்சியை விட பழனிசாமிக்கு தான் அதிக விசுவாசமாக இருப்பார்.


மோகனசுந்தரம்
செப் 07, 2025 06:49

நீ கிழிச்ச போ. அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்த பொழுது கட்சி எவ்விதமான வைப்ரண்டா இருந்தது. நீர் வந்த பிறகு எல்லாமே தலைகீழாக போய்விட்டது. இப்பொழுது ஒரு தேர்தல் வந்தால் கண்டிப்பாக உன்னுடைய கட்சி நோட்டாவுக்கு கீழ் தான் செல்லும்.


முக்கிய வீடியோ