பொது மேடையில் தி.மு.க., - கம்யூ., மோதல்
தி.மு.க., துணைப் பொதுச்செயலர் ஆ.ராஜாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் வீரபாண்டியனும், கருத்து மோதலில் ஈடுபட்டது, இரு கட்சிகளிலும் பேசுபொருளாக உருவெடுத்து உள்ளது. செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகரில் நடந்த சுய மரியாதை இயக்க நுாற்றாண்டு நிறைவு விழாவில், தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராஜா பேசியதாவது: ஈ.வெ.ராமசாமியை கம்யூனிஸ்ட் கட்சியினர் அன்று எதிர்த்தனர். சிங்காரவேலர் விமர்சித்தார்; ஜீவா எதிர்த்தார். அன்று பொதுவுடைமைவாதிகள், திராவிட இயக்கத்தை விமர்சித்தனர்; விலகி நின்றனர். இன்று அவர்கள் எல்லாரும் வந்து, ஈ.வெ.ராமசாமி தேவை என சொல்கின்றனர். அதேபோல், எப்படியெல்லாம் இருந்த காங்கிரஸ், இன்றைக்கு எப்படி இருக்கிறது தெரியுமா? அன்று ஈ.வெ.ராமசாமியை விமர்சித்தனர். நாட்டை துண்டாடுகிறோம் என்றனர். அந்த காங்கிரஸ் கட்சி, இப்போது தமிழகத்தில் தி.மு.க., எடுக்கிற நிலைப்பாடு தான் எங்கள் நிலைப்பாடு என்கிறது. காங்கிரஸ் உருவாக்கிய அரசியல் சட்டத்தை காப்பாற்றும் தகுதி, திறமை தி.மு.க.,வுக்கு தான் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் வீரபாண்டியன் பேசியதாவது:
ஆ.ராஜாவுக்கு பதில் சொல்ல விரும்புகிறேன். ஈ.வெ.ராமசாமியிடம் ஜீவா, சிங்காரவேலர் ஆகியோர் முரண்பட்டனர். அது பகையாக அல்ல; வளர் முரண். அவர்கள் இருவரையும், ஈ.வெ.ராமசாமி துரோகி என சொல்லவில்லை. ஆ.ராஜாவுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன். நாங்கள் முரண்பட்டது உண்மை. ஈ.வெ.ராமசாமிக்கு தீங்கு செய்யவில்லை; துரோகம் செய்யவில்லை. கருத்தாழத்தில் முரண்பட்டோம். அவர் இப்போது தேவைப்படுகிறார். அதனால், இந்த மேடைக்கு வந்துள்ளோம். ஆனால், அவர் வந்து சேர்ந்த இடம் கம்யூனிசம், சமத்துவம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கருப்பு - சிவப்பு கொடி தற்காலிகம். கருப்பு மறைந்து, உலகம் முழுதும் சிவப்பு கொடி மட்டும் தான் பறக்கும் என சொன்னவர், ஈ.வெ.ராமசாமி என்பதையும் மறந்துவிட முடியாது. இவ்வாறு அவர் பேசினார். ஈ.வெ.ராமசாமியை சுட்டிக்காட்டி, கம்யூனிஸ்ட் கட்சியையும், காங்கிரசையும் விமர்சித்து ஆ.ராஜா பேசியதற்கு பதிலடி தரும் வகையில், அதே மேடையில் வீரபாண்டியன் பேசியது, தி.மு.க., மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் சலசலப்பை உருவாக்கி, பேசுபொருளாகி உள்ளது. - நமது நிருபர் -