சென்னை : தமிழக சட்டசபையில், மானிய கோரிக்கை மீது இன்று முதல் விவாதம் நடக்க உள்ள நிலையில், அமைச்சர்கள் தங்கள் துறைகளில், புதிய அறிவிப்புகளை அள்ளி விட தயாராக உள்ளனர். விவாதம்
சட்டசபையில், 2025 - 26ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், 14ம் தேதியும்; வேளாண் பட்ஜெட் 15ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. பட்ஜெட் மீதான விவாதம், 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதில் அளித்தனர்.கடந்த 21ம் தேதி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்தனர். கடந்த இரண்டு நாட்களாக, அரசு விடுமுறை காரணமாக சட்டசபை நடக்கவில்லை. இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. தினமும் ஒவ்வொரு துறை வாரியாக, மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது. புதிய அறிவிப்பு
இன்று நீர்வளம், இயற்கை வளங்கள் துறை மானிய கோரிக்கை மீது, விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து, துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். ஏப்., 30 வரை சட்டசபை நடக்க உள்ளது.தற்போதைய தி.மு.க., அரசின் பதவி காலம், 2026 மே மாதம் முடிய உள்ளது. எனவே, அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்காது.எனவே, தற்போதைய மானிய கோரிக்கையின்போது, பொதுமக்களை கவரும் வகையில், அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை அள்ளிவிட திட்டமிட்டுள்ளனர். மேலும், சட்டசபை 110 விதியின் கீழ், முதல்வர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.