உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதல்முறையாக மேடை ஏறினார் துர்கா முன்வரிசைக்கு மோதிய ஆ.ராஜா - டி.ஆர்.பாலு

முதல்முறையாக மேடை ஏறினார் துர்கா முன்வரிசைக்கு மோதிய ஆ.ராஜா - டி.ஆர்.பாலு

* தி.மு.க.,வின் அடுத்த தலைவர் என்ற பிம்பம் உதயநிதிக்கு கிடைக்கும் வகையில், முழுக்க முழுக்க அவரை முன்னிலைப்படுத்தியே, சேலத்தில், நேற்று முன்தினம் நடந்த தி.மு.க., இளைஞர் அணி மாநாட்டு நிகழ்ச்சிகளும், பேச்சுக்களும் இருந்தன* 'எனக்கு துணையாக மட்டுமல்ல, துாணாகவும் உதயநிதி இருக்கிறார்' என்றும், 'மாநாடு என்றால் நேரு; நேரு என்றால் மாநாடு. மாநாடு நடக்கும் இடத்தில் நேரு இருப்பார்; நேரு இருக்கும் இடத்தில் மாநாடு நடக்கும்' என, இந்த இருவரை மட்டுமே முதல்வர் வெகுவாக பாராட்டினார்.* தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழியும், அமைச்சர் உதயநிதியும் மேடையில் அருகருகே அமர்ந்து, சிரித்து பேசியபோது, தொண்டர்கள் மத்தியில் ஆரவாரமாக இருந்தது. * மேடையில் முதல்வர் ஸ்டாலினுடன் முதல் வரிசையில் அமர்வதில், டி.ஆர்.பாலுவுக்கும், ஆ.ராஜாவுக்கும் இடையே போட்டி நடந்தது. ராஜா தன் பக்கம் அமர, டி.ஆர்.பாலுவை கைப்பிடித்து அழைத்தார். கண்டுகொள்ளாமல் சென்ற அவரை, நேரு தன் அருகில் அமர வைத்தார்* வானத்தில், 12 நிமிடங்கள் மட்டும் ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் புகழ்பாடும் வகையிலும், திராவிட இயக்க வரலாற்றை எடுத்துக்கூறும் விதத்திலும், 'ட்ரோன் ஷோ' நடந்தது. இது மாநாட்டுக்கு வந்தவர்களை வெகுவாகக் கவர்ந்தது * ஸ்டாலின் மனைவி துர்கா, அவரது தங்கை ஜெயந்தி, அவரது மகன் கருணா ரத்தினம், அமைச்சர் மகேஷ், அவருடைய தங்கை எழிலரசி ஆகியோர் பார்த்து ரசித்தனர். முதல்முறையாக மேடை ஏறிய துர்கா, மகிழ்ச்சி பொங்க தன் கையை அசைத்து, மோட்டார் சைக்கிளில் சென்ற தி.மு.க., தொண்டர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்* ஐந்து லட்சம் பேர் பங்கேற்றதாக, முதல்வர் கூறினார். திடலில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன; மேலும் 30,000 நாற்காலிகள் தயாராக வைத்திருந்தனர். ஒரு லட்சம் நாற்காலிகள் நிறைந்திருந்தன. மீதமுள்ள 30,000 காலியாக இருந்தன. தொண்டர்கள் போட்டோ எடுக்கவும், சாப்பிடவும் வெளியே சென்று இருந்ததால், நாற்காலிகள் காலியாக இருந்ததாக தெரிவித்தனர் * காலியாக கிடந்த நாற்காலிகளுக்கு மத்தியில் அமர்ந்து, தொண்டர்கள் சீட்டு விளையாடி பொழுது போக்கினர்* ஒரு ஊராட்சிக்கு 30 பேர் முதல் 50 பேர் வரை, பஸ்சில் அழைத்து வரப்பட்டுள்ளனர். தனியார் கல்லுாரி, பள்ளிகளுக்கு சொந்தமான பஸ்களும், அரசு பஸ்களும் பயன்படுத்தப்பட்டன. வேன், கார் என, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சேலத்தை முற்றுகையிட்டன * போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அமைச்சர் காந்தி கார், ஒரு மணி நேரத்திற்கு பின்னர், போலீசார் உதவியால் திடலுக்குள் நுழைந்தது. அமைச்சர் தியாகராஜனும் தாமதமாகவேதிடலுக்கு வந்தார்* மாநாட்டில் தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட பிரியாணி உள்ளிட்ட உணவு தயார் செய்யும் பணி, திருச்சியை சேர்ந்த கே.எஸ்.எம்., நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இரவு, காலை, மதியம் என, மூன்று வேளையும் அந்நிறுவனமே உணவு தயாரித்து வழங்கியது. மட்டன் பிரியாணி, சிக்கன் 65, சில்லி சிக்கன், தயிர் சாதம், கத்திரிக்காய் பச்சடி, பிரட் அல்வா, காலிபிளவர் பக்கோடா, குஸ்கா ஆகியவை மதிய உணவாக வழங்கப்பட்டது * மொத்தம் 40 டன் மட்டன், 25 டன் சிக்கனுடன் 800 அண்டாக்களில் இருந்த பிரியாணி, மதியம் 1:00 மணிக்குள் காலியாகி விட்டது. சாப்பிட கட்டுங்கடங்காத கூட்டம் அலை மோதியது. சிலர் 5, 10 என, பாக்ஸ்களில் அடைக்கப்பட்ட பிரியாணியை வாங்கிச் சென்றதால், சீக்கிரமாக காலியாகி விட்டது* அலைமோதிய கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், பிரியாணி தயாரிப்பு நிறுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில், சமைப்பதற்கு வைத்திருந்த ஆட்டுக்கறியை தொண்டர்கள் அள்ளிச் சென்றனர். சமையல் பாத்திரங்களையும் தேடி சிலர் செல்ல, போலீசார் பாதுகாக்கும் நிலை ஏற்பட்டது. தண்ணீர் பாட்டில்களையும் தொண்டர்கள் மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்றனர் * உதயநிதியின் மகன் இன்பநிதியும் மாநாட்டில் கலந்து கொண்டார். அவரை சந்தித்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் அவருடன் 'செல்பி' எடுத்துக் கொண்டனர்* 'நீட்' விலக்கை வலியுறுத்தி இளைஞர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்ட படிவங்கள், மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. பின், அந்த படிவங்கள் மாநாட்டு திடலில் சிதறிக் கிடந்தன* மாநாடு நடந்த திடல் அருகில், முத்துமலை முருகன் கோவில் உள்ளது. பெரும்பாலான தொண்டர்கள் அங்கு சென்று வழிபட்ட பின், ஊர் திரும்பினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ