உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதன்முறையாக டிஜிட்டல் முறையில் 2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு!

முதன்முறையாக டிஜிட்டல் முறையில் 2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு!

வரும் 2027ல், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டு கட்டங்களாக, டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள உள்ள பணிக்கு, 11,718 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. முதன் முறையாக 1951ல், இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடைசியாக, 2011ல் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. கடந்த 2021ல் கொரோனா பெருந்தொற்று காரணமாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. கடந்த, 14 ஆண்டுகளாக கணக்கெடுப்பு நடக்காமல் உள்ளதால், விரைவில் அதை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, 2027ல் அடுத்த கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இதற்காக 11,718 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு பின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027ஐ நடத்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவை, இதற்காக 11,718 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. டிஜிட்டல் வடிவில் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யே மொபைல் போன் செயலி வாயிலாக விபரங்கள் பதிவு செய்யப்படும். இதில் பதிவேற்றப்படும் தரவுகள், மத்திய அரசின் இணையதள போர்ட்டல் மூலம் கண்காணிக்கப்படும். தரவுகள் கசியாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு அம்சங்களுடன், டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகள், அடுத்த ஆண்டு ஏப்., - செப்., வரை நடக்கும். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு, 2027, பிப்.,ல் துவங்கும். அப்போது ஜாதிவாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக, ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களிலும், லடாக் யூனியன் பிரதேசத்திலும் அடுத்த செப்.,ல் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

மஹாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் பெயர் மாற்றம்?

மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நுாறு நாள் வேலை திட்டமான இதன் பெயரை, பூஜ்ய பாபு கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் என மாற்றவும், பணி நாட்களை, 125 நாட்களாக அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினசரி ஊதியத்தை, 240 ரூபாயாக உயர்ததுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவிக்கவில்லை. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை