உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 42 யானை வழித்தடங்கள் அறிவிப்பில் தாமதம்: ஆய்வு செய்வதாக வனத்துறை மழுப்பல்

42 யானை வழித்தடங்கள் அறிவிப்பில் தாமதம்: ஆய்வு செய்வதாக வனத்துறை மழுப்பல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வல்லுனர் குழு அறிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, 42 யானைகள் வழித்தடங்களை வெளிப்படையாக அறிவிக்காமல், வனத்துறை இழுத்தடித்து வருகிறது. கோவை தடாகம் பள்ளத்தாக்கில், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக செங்கல் சூளைகள் நடத்தப்படுவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், வன உயிரின ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழகத்தில் யானைகள் வழித்தடங்கள் குறித்த, வல்லுனர் குழு அறிக்கையை வனத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், தமிழகத்தில், 42 இடங்களில், யானைகளின் பாரம்பரிய வழித்தடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வழித்தடங்களின் விபரங்களை வனத்துறை வெளியிட வேண்டும். ஆனால், வல்லுனர் குழு அறிக்கை கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும், வனத்துறை மவுனம் காக்கிறது என, வன உயிரின ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து வன உயிரின மற்றும் சூழலியல் ஆர்வலர் ஓசை காளிதாசன் கூறியதாவது: தமிழகத்தில், 42 இடங்களில் யானைகளின் வழித்தடங்கள் இருப்பதாக அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களை, தமிழக அரசு சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். காடுகளுக்கு இடையே, உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக, யானைகள் சென்று வரும் வழித்தடங்கள் சுருங்கி வருகின்றன. இது தொடர்ந்தால், யானைகள் வழித்தட இணைப்பு துண்டிக்கப்படும் நிலை ஏற்படும். அப்போது, வழக்கமான வழித்தடங்களை விடுத்து, உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக, மக்கள் குடியிருக்கும் பகுதிகள், விவசாய நிலங்களுக்குள் யானைகள் வரும். அது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அவர்களிடம் புரிதலை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு. இதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: யானைகளுக்கான 42 வழித்தடங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இதில், 80 சதவீத நிலங்கள் அரசுக்கு சொந்தமானதாகவும், 20 சதவீத நிலங்கள் தனியாருக்கு சொந்தமானதாகவும் உள்ளன. இவற்றை யானைகள் தொடர்ந்து பயன்படுத்துகிறதா என, ஆறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்தி வருகிறோம். ஆய்வின் முடிவு அடிப்படையில், சட்டப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆண்டு தோறும் ஆகஸ்ட், 12ம் தேதி உலக யானைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதுவரை யானைகள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளை தடுப்பதே, இந்த தினத்தின் கருப்பொருளாக இருந்து வந்தது. ஆனால், அதற்கு மாற்றாக இந்த ஆண்டு, 'கூட்டங்களை வழிநடத்தும் பெண் யானைகளை போற்றுவோம்' என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் யானைகளின் தலைமுறைகள் தாண்டிய நினைவாற்றல் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு எண்ணிக்கையில் இருந்தாலும், பெண் யானை தலைமையில், யானைகள் பாரம்பரிய வழித்தடங்களை மறக்காமல் செல்வதை சுட்டிக்காட்டுவதாக, இந்த ஆண்டுக்கான கருப்பொருள் அமைந்துள்ளது. -திருநாரணன், 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
ஆக 12, 2025 07:36

வனக்காவலர்கள்தானே, அங்கேயும் லஞ்சப்பணம் விளையாடும் அதனால்தான் என்னவோ மழுப்பல் ஆசாமிகள் அதிகமாகியுள்ளனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை