| ADDED : நவ 15, 2025 12:54 AM
மதுரை: அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, மூன்று தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் தமிழ் மாநில குழுக்கூட்டம் உசிலம்பட்டியில் நடந்தது. இதில், 'சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது; சிங்கம் சின்னத்தில் போட்டியிடுவது' என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, தமிழ் மாநில பொதுச் செயலர் கதிரவன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். இந்நிலையில், கதிரவன் கூறுகையில், “அ.தி.மு.க., கூட்டணியில், ஏற்கனவே உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். கடந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. ''தற்போது, வரும் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்து, இது தொடர்பாக பழனிசாமியை சந்தித்தோம். உசிலம்பட்டி, துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஆகிய தொகுதிகளை கேட்க உள்ளோம்,” என்றார். இப்படி கதிரவன் கூறியதை சற்றும் எதிர்பார்க்காத அ.தி.மு.க.,வினர் கடும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.