பொய் வழக்கு போட்டு உரிமைகள் பறிப்பு; அரசு மீது ஹிந்து முன்னணி காட்டம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர்:'ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும்விதமாக போலீஸ்துறை செயல்படுகிறது. பொய் வழக்குகள் மூலம் உரிமைகளை தி.மு.க., அரசு பறிக்கிறது'' என்று ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.இதன் மாநில தலைவர்காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
தி.மு.க., ஆட்சிக்கு வந்த, நான்கு ஆண்டுகளில் அரசுக்கு எதிராக யாரெல்லாம் கருத்து தெரிவிக்கிறார்களோ, அவர்களை, பொய் வழக்கின் வாயிலாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் கருத்துப்பதிவு செய்தால்கூட, கைது நடவடிக்கை தொடர்கிறது. அன்றாடம் பல மாவட்டங்களில் பல கொலைகள் என பட்டியல் நீள்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தொடர்கிறது. இதை, யாராவது சுட்டிக்காட்டினால், சட்ட நடவடிக்கை பாய்கிறது.ஹிந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் பழநி ஜெகன், 'சென்னையில் ஒரு பிரபல பிரியாணி கடையில் சுகாதாரமற்ற பிரியாணியை சாப்பிட்டு, 15 பேர் உடல் நலக்குறைவுக்கு ஆளாகினர்; உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஏன், நடவடிக்கை எடுக்கவில்லை' என சமூக வலைதளம் வாயிலாக கேள்வி எழுப்பினார்.ஜெகன் மீது, ஜாமினில் வரமுடியாத வகையில் வழக்குப்பதிவு செய்து, தனது வஞ்சத்தை தீர்த்து கொண்டிருக்கிறது, போலீஸ்துறை. இதன் பின்னணியில் தி.மு.க., நிர்வாகிகளும், இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்களும் உள்ளனர்.தி.மு.க.,வினரோ அல்லது கூட்டணி கட்சியினரோ தவறு செய்தால்மூடி மறைத்து, நடவடிக்கை எடுப்பதில்லை. சுட்டி காட்டுபவர்கள் மீது பொய் வழக்கு அஸ்திரம் பயன்படுத்தப்படுகிறது.தி.மு.க., அரசின் இந்த அடக்குமுறை வெகு நாட்களுக்கு நீடிக்காது. தி.மு.க.,வை ஆட்சிப் பொறுப்பில் இருந்து, தமிழக மக்கள் விரட்டி அடிப்பர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.