சென்னை: உட்பிரிவுகள் தவிர்த்து, 'சர்வே' எண் முழுதுற்கும் உட்பட்ட நிலத்துக்கான வரைபடங்களை, 'ஆன்லைன்' முறையில் பெறும் வசதி நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் நிலம் தொடர்பான பட்டா, நில அளவை வரைபடம் போன்றவை, 'டிஜிட்டல்' முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இந்த ஆவணங்களை, பொதுமக்கள் ஆன்லைன் முறையில் பார்க்க, பிரதி எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது.வருவாய் துறையின், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண், உட்பிரிவு எண் போன்ற விபரங்களை அளித்தால், பட்டா மற்றும் நில அளவை வரைபடம் கிடைக்கும். இதில், தற்போதைய நிலவரப்படி, பெரும்பாலான நிலங்களுக்கு, ஆன்லைன் முறையில் பட்டா கிடைத்தாலும், நில அளவை வரைபடம் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதில், நில அளவை வரைபடங்களை, மக்கள் ஆன்லைன் முறையில் பிரதி எடுப்பதை எளிதாக்கும் நடவடிக்கைகளை, வருவாய் துறை முடுக்கி விட்டுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட இணையதளத்தில், சர்வே எண்ணை மட்டும் அளித்தால், நிலத்தின் ஒட்டுமொத்த நில அளவை வரைபடம் கிடைக்கும். இதில், சர்வே எண்ணுடன் உட்பிரிவு எண்ணை உள்ளீடு செய்தால், சம்பந்தப்பட்ட மனைக்கான நில அளவை வரைபடம் இணையதளத்தில் கிடைக்கும்.இந்த இரண்டு வசதிகளும் மக்கள் பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த நிலத்துக்கான வரைபடங்களை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வீடு, மனை வாங்குவோர், தங்களுக்கான நிலம் பிரதான சர்வே எண்ணுக்கு உட்பட்ட பகுதியில், எங்கு அமைந்துள்ளது என்பதையும், அக்கம் பக்கத்து மனைகள் குறித்த விபரங்களையும் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
'மீண்டும் வழங்க வேண்டும்'
இதுகுறித்து, தாம்பரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பி.விஸ்வநாதன் கூறியதாவது: வீடு, மனை வாங்குவோருக்கு சில நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட மனைக்கான நில அளவை வரைபடமும், சில இடங்களில் ஒட்டுமொத்த வரைபடமும் தேவைப்படுகிறது. இந்த இரண்டு சேவைகளும் பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த வரைபடங்களை பார்க்கும் வசதி தடைபட்டுள்ளது. மனைப்பிரிவு திட்டங்களில், ஒரு சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலம், பல்வேறு பாகங்களாக பிரிக்கப்பட்டு இருக்கும். இதில், ஒட்டுமொத்த வரைபடம் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. பொதுமக்களின் தேவை மற்றும் பயன்பாட்டை கருத்தில் வைத்து, இந்த வசதியை மீண்டும் வழங்க, வருவாய் மற்றும் நில அளவை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தொழில்நுட்ப பிரச்னை காரணமாக, இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,” என்றார்.