உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அதிகாரிகளுக்கு சிறை, அபராதம் விதிப்பு; தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை

அதிகாரிகளுக்கு சிறை, அபராதம் விதிப்பு; தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை

சென்னை : நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில், கோவை மாவட்ட முன்னாள் கலெக்டர் கிராந்தி குமார் பாட்டீல் உட்பட, எட்டு அரசு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட, சிறை தண்டனை மற்றும் அபராதத்துக்கு, இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை மாவட்டம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்த முதியவர் ஜான் சாண்டிக்கு, சொந்தமான நிலத்தின் பட்டா ஆவணத்தில், சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட இருவரின் பெயரை நீக்க வேண்டும் என, 2023ம் ஆண்டு நவம்பர், 8ல், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை, குறித்த காலத்தில் அமல்படுத்தவில்லை எனக்கூறி, ஜான் சாண்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ''நீதிமன்ற உத்தரவின்படி, குறித்த காலத்தில் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கவில்லை,'' எனக் கூறி, கோவை மாவட்ட முன்னாள் கலெக்டர் கிராந்தி குமார் பாட்டில், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, ஆர்.டி.ஓ., பி.கே. கோவிந்தன் ஆகியோருக்கு, தலா 10,000 ரூபாய் அபராதம், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேல் ஆகியோருக்கு, ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ஒரு மாத ஊதியத்தை அபராதமாக விதித்து உத்தரவிட்டார்.இதேபோல, மேலும் இரு வழக்குகளில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாசில்தார் வெங்கட்ராமன், கோவை ஆதிதிராவிடர் நல சிறப்பு தாசில்தார் ஸ்ரீமாலதி, மதுக்கரை தாசில்தார் ஏ.சத்யன், வெள்ளலூர் வி.ஏ.ஓ., விஜயகுமார் ஆகியோருக்கு, தலா ஒரு மாதம் சிறை, தலா 25,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, கோவை முன்னாள் கலெக்டர் உள்பட எட்டு அதிகாரிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மனுக்கள் நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி, டி.வி.தமிழ்செல்வி அடங்கிய அமர்வில், சமீபத்தில் விசாரணைக்கு வந்தன. அதிகாரிகள் தரப்பில், 'உயர் நீதிமன்ற உத்தரவை தாமதமாக அமல்படுத்தியதாக கூறி, தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது' என தெரிவிக்கப்பட்டது.இதை கேட்ட நீதிபதிகள், அதிகாரிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதித்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ramesh Sargam
ஜூன் 02, 2025 20:44

ஒரு நீதிபதி சிறை தண்டனை, அபராதம் விதிக்கிறார். மற்றொரு நீதிபதி அதை நிராகரிக்கிறார் அல்லது அதற்கு இடைக்காலத்தடை விதிக்கிறார். எனக்கு ஒரு டவுட்டு ரொம்ப நாளா. ரெண்டு நீதிபதிகளும் ஒரே இந்திய சட்ட புத்தகத்தைதானே படித்திருப்பார்கள். அப்படியிருக்க எப்படி மாறுபாடான உத்தரவுகள், நீதிகள்? தலை சுத்துது.


உ.பி
ஜூன் 02, 2025 12:36

waste of salaried people's Tax money on judges and courts


RAAJ68
ஜூன் 02, 2025 10:29

நீதிமன்றங்களுக்கு இடையே ரகசிய ஒப்பந்தம் நாங்கள் தண்டனை தருவோம் நீங்கள் அதை தடை செய்யலாம். கீழமை நீதிமன்றங்கள் கொடுக்கும் தீர்ப்புகளுக்கு உயர் நீதிமன்றம் தடை போடும் உயர்நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை போடும். ரொம்ப நன்றாக உள்ளது நீதி நிர்வாகம்.


Dharmavaan
ஜூன் 02, 2025 09:29

நீதி மன்றங்களிலேயே வரட்டு கவ்ரவ மோதல் ,,இதெல்லாம் நீதிபதிகளா சட்டம் தவறான பயன்பாடு


Kalyanaraman
ஜூன் 02, 2025 09:12

சாமானியனின் வரிப்பணத்தில் இயங்கும் நீதிமன்றங்கள் சாமானியனுக்கு அல்ல என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இருக்கிறது. அதிகாரம், பணத்திற்கே நமது சட்டங்களும் நீதிமன்றங்களும்.


மீனவ நண்பன்
ஜூன் 02, 2025 07:41

எப்படி இப்படி குத்துமதிப்பா தண்டனை தராங்க? அல்லது நீக்கறாங்க? சட்ட புத்தகங்கள் ரெண்டு நீதிபதிகளுக்கும் ஒரே மாதிரி தானே இருக்கும் ?


Sundaran
ஜூன் 02, 2025 07:40

தடை எதற்கு வழக்கை நீட்டிக்காமல் அனைவரையும் விடுதலை செய்து நேரத்தை மிச்ச படுத்தலாம். இத்தகைய தீர்ப்புகளால் ஊழல் அதிகாரிகள் துணிச்சல் அடைந்து மீண்டும் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விடுவார்கள் வாழ்க நீதி


K V Ramadoss
ஜூன் 02, 2025 07:38

இப்போது எது நீதி என்று தெரியாமல் குழம்புகிறோம்..


RAAJ68
ஜூன் 02, 2025 10:30

குழம்பவே வேண்டாம். நீதியே இல்லை . எதற்கு குழப்பம்.


VENKATASUBRAMANIAN
ஜூன் 02, 2025 07:22

நீதிமன்றங்கள் ஏன் இப்படி. மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இது நாட்டிற்கு நல்லது இல்லை. அதிகாரிகள் என்ன நீதிக்கு அப்பாற்பட்டவர்களா. இதைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லையா.


Srinivasan S
ஜூன் 02, 2025 07:19

பணம் படைத்தவன் இந்த நாட்டில் எந்த நீதி மன்றத்திலும் சாதகமான நீதி வாங்கலாம். இல்லாவிடில் பயமுறுத்தியும் வாங்கலாம். ஆங்கிலத்தில் இதை, 'பெண் குதிரை கூடப் பணத்தைக் கண்டால் உன் சொல் படி ஆடும்' என்பார்கள். இல்லாவிடில் உச்ச நீதி மன்ற நீதிபதி முக்கியமான விழாவில் பாதியில் வந்த தொலைபேசி அழைப்பைக் கேட்டு, ஜாமீன் வழங்க ஓடுவாரா?