உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சந்தையில் கலப்பட மஞ்சள் அதிகரிப்பு; பயன்படுத்தும் முன் பரிசோதிக்கணும்!

சந்தையில் கலப்பட மஞ்சள் அதிகரிப்பு; பயன்படுத்தும் முன் பரிசோதிக்கணும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சந்தையில் கலப்பட மஞ்சள் துாள் விற்பனை அதிகரித்து இருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், மஞ்சள் துாளை பயன்படுத்துவதற்கு முன், பரிசோதனை செய்து அதன் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்' என, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தி உள்ளது.உணவின் சுவை, நிறம் மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தி போன்ற உடல் ஆரோக்கியத்திற்காவும், அனைத்து விதமான சமையலிலும் மஞ்சள் துாள் சேர்க்கப்படுகிறது.ஆயுஷ் மருத்துவத்தில் முக்கிய பங்காற்றும் மஞ்சள் துாளில், கலப்படம் செய்து சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.நிறத்தை மேம்படுத்த, செயற்கை நிறமிகள், தீங்கு விளைவிக்கும் சாயங்கள் உள்ளிட்ட பொருட்கள் கலக்கப்படுகின்றன. குறிப்பாக, மெட்டானில் மஞ்சள், லெட் குரோமேட், சுண்ணாம்பு துாள், காட்டு மஞ்சள் ஆகியவை கலக்கப்படுகின்றன. இவற்றை சாப்பிடுவதால், புற்றுநோய், வயிற்று வலி, குமட்டல், செரிமான கோளாறுகள் என்று, உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என, மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.லாப நோக்கத்திற்காக, அதிக அளவில் கலப்பட மஞ்சள் துாள் விற்பனை செய்யப்படும் நிலையில், அவற்றை வீட்டிலேயே பரிசோதித்து கண்டறியலாம் என, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.இது குறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: சந்தையில், அனைத்துவித மஞ்சள் துாளும் சந்தேகத்திற்கு உரியவை அல்ல. ஆனால், பிரபல நிறுவனத்தின் பெயரில் கூட, சில நேரங்களில் போலியான லேபிள் ஒட்டப்பட்டு மஞ்சள் துாள் விற்கப்படுகிறது.இது போன்ற கலப்பட மஞ்சள் துாளை வாங்கி சாப்பிடுவதால், சிறிது, சிறிதாக உடல்நலம் பாதித்து புற்று நோய் உண்டாகிறது.எனவே, வீட்டில் பயன்படுத்தப்படும் மஞ்சள் துாள் தரத்தை உறுதி செய்து கொள்வது முக்கியம். ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் துாள் சேர்க்கவும். சிறிது நேரத்தில், மஞ்சள் துாள் அனைத்தும் டம்ளரின் கீழே தங்கிவிட்டால் அது கலப்பிடமில்லாத மஞ்சள் துாள். கீழே படியாமல், அதன் துகள் மேலே மிதந்தாலோ, தண்ணீர் அடர்த்தியான கரும் மஞ்சள் நிறமாக மாறினாலோ, அது கலப்பட மஞ்சள் துாள்.மஞ்சள் துாளில் சந்தேகம் எழுந்தால், அவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து, உணவு பாதுகாப்பு துறையின், 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும், உணவு பாதுகாப்பு துறையின் செயலி மற்றும் சமூக வலைதளங்களிலும் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட கடையிலோ, நிறுவனத்திலோ ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

MaRan
ஜன 27, 2026 12:21

இதை கண்டுபிடித்து தடை செய்வதர்க்கத்தானே காவல்துறையும் உணவு பாதுகாப்பு துறையும் உள்ளது.. அதைவிடுத்து மக்கள் செய்துகொள்ள வேண்டும் என்றால் இந்த துறைகள் எதற்கு.. எதனை மக்கள் இந்த செய்தியை பார்ப்பார்கள். கிராமங்களில் உள்ள அப்பாவி படிக்காத மக்களுக்கு இந்த செய்தி சேர்வதற்கு தமிழ் நாடு அரசு என்ன செய்ய போகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை