உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ஜ., கூட்டணியில் சேர விடாமல் விஜயை தடுக்கும் ஜான் ஆரோக்கியசாமி

பா.ஜ., கூட்டணியில் சேர விடாமல் விஜயை தடுக்கும் ஜான் ஆரோக்கியசாமி

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க., இணைவதை, அக்கட்சி தலைவரான விஜயின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி தடுப்பதாக, பா.ஜ., மேலிட வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதுகுறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க.,வுக்கு எதிராக பலமான கூட்டணியை அமைக்க, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு, த.வெ.க., தலைவர் விஜயை, அ.தி.மு.க., - பா.ஜ., தலைவர்கள் அழைத்தனர். த.வெ.க., மாநாடு, மக்கள் சந்திப்புகளில் விஜய், தி.மு.க.,வை மட்டுமின்றி, பா.ஜ.,வையும் கடுமையாக விமர்சித்தார். பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்திருப்பதால், அ.தி.மு.க.,வையும் விமர்சித்து பேசினார். தனித்து போட்டியிட்டு, 20 - 25 சதவீத ஓட்டுகளை பெற்று, தி.மு.க.,வுக்கு மாற்று த.வெ.க., தான் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதில், விஜய் உறுதியாக இருந்தார். இந்த சூழலில், கரூரில் விஜயின் மக்கள் சந்திப்பு பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், த.வெ.க.,வினரை கைது செய்து, அக்கட்சியினருக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், தி.மு.க., அரசு தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தியது. இந்த விவகாரத்தில், த.வெ.க.,வுக்கு தேவையான உதவிகளை செய்ய விரும்புவதாக, மத்திய அமைச்சர் அமித் ஷா, விஜயிடம் தெரிவித்தார். இதையடுத்து, தி.மு.க.,வை வீழ்த்த, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார் என, அ.தி.மு.க., - பா.ஜ., எதிர்பார்த்தது. அதன் வெளிப்படாக, தமிழக காவல் துறை விசாரித்த கரூர் கூட்ட நெரிசல் வழக்கை, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த த.வெ.க., மூத்த நிர்வாகிகள் பலரும் வெளியில் வர துவங்கியுள்ளனர். தமிழகத்தில், தேர்தல் வரை கூட்டணி பேச்சு நடத்த விரும்பாமல், பீஹார் தேர்தல் முடிந்ததும், அதாவது இம்மாதத்திற்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டும் என்பதில், அமித் ஷா திட்டவட்டமாக உள்ளார். எனவே, கூட்டணி குறித்து, பா.ஜ., தரப்பில், த.வெ.க.,விடம் சமீபத்தில் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது, விஜய் தயக்கம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, பா.ஜ., தரப்பில் நடத்திய விசாரணையில், 'த.வெ.க.,வுக்கு முக்கிய ஓட்டு வங்கியாக இருக்கப்போவது, சிறுபான்மையின மக்கள் தான்; பா.ஜ., கூட்டணியில் சேர்ந்தால், த.வெ.க.,வுக்கு எந்த காலத்திலும் அவர்களின் ஆதரவு கிடைக்காது' என, விஜயின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி கூறி, முட்டுக்கட்டை போட்டதே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இருந்தாலும், 'தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற பொது நோக்குடன், தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வேண்டும்' என, பா.ஜ., மேலிட தரப்பில் இருந்து, விஜயிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை