நாகர்கோவில் : நள்ளிரவில் பஸ் ஸ்டாண்டில் நின்ற பள்ளி மாணவியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கறிஞர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே மூலச்சலை சேர்ந்த சகோதரியரான 14 மற்றும் 12 வயது பள்ளி மாணவியர் வீட்டில் இருந்து திடீரென மாயமாகினர். பெற்றோர் புகாரில் நான்கு தனிப்படைகள் மாணவியரை தேடினர். விசாரணையில், மார்ச் 14 -அதிகாலை, நாகர்கோவில் அருகே சுங்கான் கடையில் உள்ள ஒரு டீக்கடையில் இம்மாணவியருடன் வந்த ஒருவர் டீ குடித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.அந்த நபர், தக்கலையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜித்குமார், 34, என, தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இரண்டு பள்ளி மாணவியரை தான் பார்த்ததாகவும், அவர்களை வடசேரியில் இருந்து மதுரை பஸ்சில் ஏற்றி விட்டதாகவும் கூறினார்.மாணவியரின் மொபைல் போன், 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை தக்கலை பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்சில் வந்திறங்கிய இரு மாணவியரையும் போலீசார் மீட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அஜித்குமார், 14 வயது மாணவியை, தன் அலுவலகத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.அந்த மாணவி தென்காசியை சேர்ந்த ஒருவருடன் இன்ஸ்டாகிராமில் பழகிஉள்ளார். அவரை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து, 10,000 ரூபாய் பணத்துடன் இரவில் புறப்பட்டு வந்துள்ளார். உடன் தன் தங்கையையும் அழைத்து வந்துஉள்ளார். அப்போதுதான் வழக்கறிஞர் அவர்களை பஸ் ஸ்டாண்டில் பார்த்து, மிரட்டி அழைத்துச் சென்றது தெரியவந்தது.தந்தை பிரிந்த நிலையில் தாய் பராமரிப்பில் இரு மாணவியரும் இருந்துள்ளனர். தாய் நாகர்கோவிலில் உள்ள ரப்பர் கம்பெனிக்கு இரவுப்பணிக்கு சென்றதை பயன்படுத்தி, பாட்டியிடம் பொய் சொல்லி, வீட்டிலிருந்து வந்துள்ளனர். மாணவியர் இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.இதற்கிடையே, அஜித்குமாரை போலீசார் பிடிக்க சென்றபோது, அவர் தப்பி ஓட முயன்றதில் கை முறிந்தது. அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஜித்குமாருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடப்பதாக இருந்தது. அவரது மோசமான நடவடிக்கையை அறிந்த பெண் வீட்டார் திருமணத்தை உடனடியாக நிறுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.