உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  ஆட்சி முடியும் நேரத்தில் லண்டன் டூர்: கிடப்பில் செல்வப்பெருந்தகை மனு

 ஆட்சி முடியும் நேரத்தில் லண்டன் டூர்: கிடப்பில் செல்வப்பெருந்தகை மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சட்டசபை பொதுக் கணக்கு குழுத் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, அரசு செலவில் லண்டன் செல்ல, முதல்வர் ஸ்டாலினிடம் அனுமதி கேட்டு எழுதிய கடிதம், அரசின் நிதி பற்றாக்குறை காரணமாக, நிராகரிக்க வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபையில் மதிப்பீட்டுக் குழு, பொதுக் கணக்கு குழு உட்பட, 15க்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன. இதில், பொதுக் கணக்கு குழு தலைவராக, தமிழக காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ.,வுமான செல்வப்பெருந்தகை இருந்து வருகிறார். உறுப்பினர்களாக, காஞ்சிபுரம் எழிலரசன், கடலுார் அய்யப்பன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஆண்டுதோறும் பொதுக் கணக்கு குழு உறுப்பினர்கள், மாவட்ட அளவில் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வர். மாவட்ட திட்டப் பணிகள் மற்றும் செயல்பாடுகளையும் ஆய்வு மேற்கொள்வர். இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள், செல்வப்பெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்கள் அனைவரும், லண்டன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். அங்குள்ள பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு உறுப்பினர்களை சந்தித்து பேச திட்டமிட்டனர். அதன்படி, ஒரு வார பயணமாக, வெளிநாடு செல்ல, அரசிடம் அனுமதி கேட்டு, சபாநாயகர் அப்பாவுவிடம் செல்வப்பெருந்தகை கடிதம் கொடுத்துள்ளார். அக்கடிதம், சபை முன்னவர் என்ற முறையில், அமைச்சர் துரைமுருகனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின், முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது குறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சட்டசபை வரலாற்றில், பொதுக் கணக்கு குழு உள்ளிட்ட எந்த குழுவும் வெளிநாடு சென்றது கிடையாது. இந்தியாவுக்குள் பல வெளிமாநிலங்களுக்கும் சென்று வருவர். முதல்முறையாக வெளிநாடு செல்ல, செல்வப்பெருந்தகை அனுமதி கேட்டுள்ளார். ஆட்சியே முடியப் போகும் சூழலில், பல லட்ச ரூபாயை செலவு செய்து சுற்றுலா செல்ல, நிதித்துறை அனுமதிக்காது. அதனால், முதல்வர் ஸ்டாலின், செல்வப்பெருந்தகை கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ளார். இவ்வாறு அரசு வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்