உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அடுத்தடுத்து மூடுவிழா காணும் தியேட்டர்கள்: அடையாளத்தை இழக்கும் மதுரை

அடுத்தடுத்து மூடுவிழா காணும் தியேட்டர்கள்: அடையாளத்தை இழக்கும் மதுரை

மதுரை:'கலை வளர்ந்ததும் இங்கேதான் காதல் சொன்னதும் இங்கேதான் கட்சி வளர்ந்ததும் ஆட்சி புடிச்சதும்இந்த சினிமா(தியேட்டர்)தான்'என வாழ்வியலோடு கலந்த சினிமாவை, அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு போய் சேர்த்தது தியேட்டர்கள்தான். மதுரையைச் சேர்ந்த பலர் இன்று சினிமாவில் 'ஸ்டார்களாக' வலம் வர காரணமும் இந்த சினிமா தியேட்டர்கள்தான். ஊரின் அடையாளமாக, நட்புகள், உறவுகளை சந்திக்கும் இடமாக, பொழுதுபோக்கும் இடமாக இருந்த தியேட்டர்கள், அசுரனாக வளர்ச்சியடைந்த நவீன தொழில்நுட்பங்களோடு போட்டியிட முடியாமல் மூடுவிழா கண்டு வருகின்றன. சில தியேட்டர்களை கார்ப்பரேட் கம்பெனிகள் குத்தகைக்கு எடுத்து புதிய பெயர்களில் நடத்தி வருகின்றன. சில தியேட்டர்கள் ஜவுளி கடைகளாக, வணிக வளாகங்களாக, அபார்ட்மென்ட்களாக மாறிவிட்டன. அந்த வரிசையில் இணைய உள்ளது மதுரை அண்ணாநகரில் உள்ள அம்பிகா, மூகாம்பிகா தியேட்டர்கள். தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இத்தியேட்டர்கள் வணிக வளாகமாக மாறப்போகிறது. மதுரையில் ஏற்கனவே நடனா, நாட்டியா, நர்த்தனா, இந்துமதி, தினமணி தியேட்டர்கள் குடியிருப்பாகவும், வணிக இடமாகவும் மாறிவிட்டன. வெள்ளைக்கண்ணு, அபிராமி, அம்பிகை தியேட்டர்கள் மாறிக்கொண்டிருக்கின்றன.

ஆசியாவிலேயே பெரியது

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர் என பெருமை கொண்ட மதுரை தங்கம் தியேட்டர் இன்று ஜவுளி ஷோரூமாகி விட்டது. மதுரை நகரின் முதல் தியேட்டரான தெற்குமாசிவீதி 'சிட்டி சினிமா' தியேட்டர் பார்க்கிங் இடமாகவும், வணிக இடமாகவும் மாறிவிட்டது. இங்கு திரையிடப்பட்ட 'சிந்தாமணி' படம் மூலம் கிடைத்த வருவாயில் கீழவெளிவீதியில் சிந்தாமணி தியேட்டர் கட்டப்பட்டது. அந்த தியேட்டர் இருந்த இடம் இன்று ஜவுளி ஷோரூமாக மாறிவிட்டது. மீனாட்சி, ராம்விக்டோரியா, நியூடீலக்ஸ் போன்ற சில தியேட்டர்கள் செயல்படாமல் பாழடைந்து வருகின்றன. இதுபோன்று எத்தனையோ தியேட்டர்கள் மதுரையின் அடையாளமாக இருந்தன. அவை அழிந்துவிட்ட நிலையில், மீதமிருக்கும் சில தியேட்டர்களும் 'வளர்ச்சி' என்ற பெயரில் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றன.

தியேட்டர் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:

முன்பெல்லாம் மினிமம் கியாரண்டி என்ற அடிப்படையில் படம் சரியாக போகவில்லை என்றாலும் போட்ட முதலீட்டை ஓரளவு எடுத்துவிடலாம். இன்று சூழ்நிலைகள் மாறிவிட்டன. ஓ.டி.டி., தளங்கள் வரவால் தியேட்டர்களில் ஒருவாரம் படம் ஓடுவதே பெரிய விஷயம். சினிமா தயாரிப்பாளர்கள் தாங்கள் செலவு செய்த தொகையை 'டிவி' சேனல்கள், ஓ.டி.டி., தளங்களில் விற்று நஷ்டத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்கிறார்கள். ஆனால் எங்கள் நிலைமை வேறு. மின்கட்டணம், வேலையாட்கள், சொத்து வரி என பல சிரமங்களை தாண்டி டிக்கெட் விற்றும் லாபம் கிடைப்பதில்லை. அதனால் தான் பலரும் தியேட்டர் தொழிலை கைவிட்டு வருகிறார்கள் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
பிப் 21, 2025 22:16

சுவாரஸ்யமான பழைய நிகழ்வு. எண்பதுகளில் நகரின் மையப் பகுதியில் இருந்த அரங்கத்தில் கவர்ச்சிகரமான ஆங்கிலப் படத்தைக் காண கட்டுக்கடங்காத கூட்டம். டிக்கெட் வாங்க வந்த ஒவ்வொருவரையும் ஆங்கில எழுத்துக்கள் ABCD சொல்லத் தெரியுமா என்று(TEST) கேட்டுப் பார்த்துதான் தியேட்டருக்குள் அனுமதிக்கப் போகிறோம் என்று போலீசார் ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள். அடுத்த நிமிடம் பெரும்பாலான கூட்டம் காலியானது.


Ram pollachi
பிப் 21, 2025 17:14

தமிழ் படத்துக்கு கூட்டம் வரவில்லை என்று தான் ஆங்கில அறிவு மக்களுக்கு வர வேண்டும் என்று ஆங்கில படம் போட்டார்கள் என்ன ஒன்றும் புரியவில்லை என்று கதை சுருக்கத்தை தியேட்டர் வாசலில் வைத்தார்கள் வர வில்லையே கூட்டம் சரி இடை இடையே நீல பட போட்டார்கள் அது முடிந்த உடன் ஒட்டு மொத்த தியேட்டர் காலியாகிவிடும்... பிறகு திருமண மண்டபம், அடுத்து மால் ஆகிவிட்டது... மதுரை மட்டும் அல்ல எல்லா ஊரிலும் இதே கதை தான்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 21, 2025 11:58

மதுரையின் அடையாளம் அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில் திருமலை நாயக்கர் மகால் போன்றவை.


ஆரூர் ரங்
பிப் 21, 2025 11:40

ரயிலடி அருகே ரீகல் டாக்கீஸ் பகல் நேரத்தில் லைப்ரரியாக செயல்பட்டது. வெயிலால் கொஞ்சம் லேட்டாக சென்று புத்தகம் எடுத்து அரைப் பக்கம் படிப்பதற்குள் சார் டிக்கட் கவுண்டர் திறக்கும் நேரம். கிளம்புங்கன்னு குரல். ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரையிடுவர். இப்போ இருக்கா?


ஆரூர் ரங்
பிப் 21, 2025 11:33

சிறுவயதில் மீனாட்சி கோவிலருகிலுள்ள டாக்கீஸ் சென்ற போது, கவுண்டருக்கு வெளியே பிளாட்பாரத்தில் டிக்கெட் விற்றார்கள். வாங்கி உள்ளே போய் உட்கார்ந்தால் அடுத்த நிமிடமே காலின் மீது பெருச்சாளி ஓடியது. பேனை ஒரு ஊழியர் குச்சியால் சுற்றி ஸ்டார்ட் செய்து விட்டுச் சென்றார். அருகிலிருந்த நபர் பட பிரிண்ட் புதிய காப்பியா என சந்தேகமாக கேட்டார். குறைந்தது இருபது பேர் பீடி பிடித்து இழுத்து விட்டுக் கொண்டு அரங்கத்தை புகைமண்டலமாக்கிக் கொண்டிருந்தனர். பாக்கெட் சாராய குடிமகன் ஒருவர் என்மீது சாய்ந்து தேய்த்துக் கொண்டே சென்றான். படம் ஓடிக் கொண்டிருந்தபோதே நெய் போளி முப்பது பைசா முறுக்கு பத்து பைசா ன்னு வியாபாரக் குரல். மூன்றாவது ரீல் ஓடியவுடன் இடைவேளை விட்டு புரஜக்டரில் ஃபிலிம் ரீல் மாற்றினர். ராட்சச கொசுக்கடி பொறுக்கவே முடியாமல் வெளியேறிவிட்டேன்.


Shekar
பிப் 21, 2025 13:32

நீங்கள் குறிப்பிடுவது இம்பீரியல் தியேட்டர். அது ஒரு மூன்றாம் தர தியேட்டர். நடுதட்டு மற்றும் குடும்பத்தினர் அங்கு செல்வதில்லை. பெரும்பாலும் அது சமூக விரோதிகளின் பொழுது போக்கிடமாக இருந்தது. நான் போகாத ஒரே தியேட்டர்.


ராமகிருஷ்ணன்
பிப் 21, 2025 07:16

நல்லதுதான் நாட்டுக்கு நல்லது. சினிமா மூலம் அரசியலுக்கு வந்து, மக்களை மடையர்களாக்கி ஆட்சியில் அமர்ந்த கட்சியினரை நினைத்து பாருங்கள். 1000 தலைமுறைக்கு வேண்டிய சொத்துக்களை சுருட்டிய களவாணி கழகங்களை நினைத்து பார்த்தாலே சினிமா ஒழிய வேண்டும் என்று நினைப்பீர்கள்.


சமீபத்திய செய்தி