உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரயில்வே ஆலோசனைக்கூட்டத்தை அரசியலாக்கிய எம்.பி.,க்கள்!

ரயில்வே ஆலோசனைக்கூட்டத்தை அரசியலாக்கிய எம்.பி.,க்கள்!

மதுரை : மதுரையில் நேற்று நடந்த தெற்கு ரயில்வே ஆலோசனை கூட்டத்தை எம்.பி.,க்கள் சிலர் 'அரசியலாக்கினர்'. பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, ரயில்வே ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்க அனுமதித்தது ஏன் என கொதிப்படைந்தனர்.தெற்கு ரயில்வே சார்பில் நடந்த இக்கூட்டத்தின் குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட வைகோ கூட்டத்தை வழிநடத்தினார். எம்.பி.,க்கள் மதுரை வெங்கடேசன், திண்டுக்கல் சச்சிதானந்தம், தேனி தங்கத்தமிழ்ச்செல்வன், விருதுநகர் மாணிக்கம்தாகூர், நெல்லை ராபர்ட் புரூஸ், தென்காசி ராணி, திருச்சி துரை, கேரளா மாவேலிக்கரை சுரேஷ் கொடிக்குன்னில், புதுக்கோட்டை அப்துல்லா, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மர் பங்கேற்றனர்.ரயில்வே சார்பில் பொதுமேலாளர் ஆர்.என்.சிங், துணை பொதுமேலாளர் அஜய் கவுசிக், கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா பங்கேற்றனர். கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து எம்.பி.,க்கள் கூறியதாவது:

திண்டுக்கல் - சபரிமலை ரயில்

வைகோ கூறியதாவது: திண்டுக்கல் - சபரிமலை ரயில் விட வேண்டும். மதுரையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு புதிய ரயில்கள் இயக்க வேண்டும். புதுப்புது வழித்தடங்களை உருவாக்க வேண்டும். என் சொந்த ஊரில் இருந்து 6 கி.மீ.,ல் உள்ள பிரிட்டிஷ் காலத்து கரிவலம்வந்தநல்லுார் ஸ்டேஷனை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினேன். நிறுத்தப்பட்ட நிறுத்தங்களை மீண்டும் கேட்டுள்ளோம்.ரயில்வே பட்ஜெட் முன்பு தனியாக தாக்கல் செய்யப்பட்டபோது, அதுகுறித்த விபரங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை போன்றவை குறித்து புத்தகம் வெளியிடப்பட்டு வந்தது. அதை நிறுத்தியது அநியாயம்.

வாரம் 4 நாள் போடி - சென்னை ரயில்

வெங்கடேசன் கூறியதாவது: ரயில்வே துறையில் ஹிந்தி சொல்லை அப்படியே தமிழில் மொழி பெயர்த்துள்ளனர். இப்படி உத்தரவிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். பாம்பன் புதிய ரயில் பாலம் 33 சதவீதத்திற்கும் குறைவாக பாதுகாப்பு குறை இருப்பதாகவும், வந்தே பாரத் ரயில் இன்ஜின் பகுதி எடை குறைவாக இருப்பதாகவும் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளதை எழுத்துப்பூர்வமாக கேட்டுள்ளோம்.வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் போடி - சென்னை ரயில் 4 நாட்கள் இயக்கப்படும் என தெரிவித்தனர். திருச்சி - ஹவுரா எக்ஸ்பிரஸ், தாம்பரம் - ஐதராபாத் ரயில்களை மதுரையில் இருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. லோகோ பைலட்டிற்காக 619 இன்ஜின்களில் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், 150 இன்ஜின்களில் அமைக்கும் பணி நடப்பதாகவும் தெரிவித்தனர்.

மதுரையில் இருந்து 'மெமு' ரயில்

மாணிக்கம்தாகூர் கூறியதாவது: மதுரையில் இருந்து திண்டுக்கல், தேனி, விருதுநகர், மானாமதுரைக்கு 'மெமு' ரயில் விட வேண்டும் என வலியுறுத்தினோம். மதுரை - அருப்புக்கோட்டை - துாத்துக்குடி வழித்தடம் குறித்து ரயில்வே வாரியம் தெளிவுப்படுத்த வேண்டும். ரயில்வே பணி மக்கள் தொடர்பானது என்பதால் தமிழ் மொழி தெரிந்தவர்களை இங்கு பணியமர்த்த வேண்டும். இவ்வாறு கூறினார்.இதேபோல் மற்ற எம்.பி.,க்களும் தங்கள் தொகுதிக்கான தேவைகள் குறித்து பேசினர். மனுவாகவும் கொடுத்தனர்.

உங்களுக்கு தமிழ் தெரியுமா

கூட்டத்தில் பேசிய தங்கத்தமிழ்ச்செல்வன், முன் வரிசையில் இருந்த பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உள்ளிட்டோரை பார்த்து 'உங்களுக்கு தமிழ் தெரியுமா. தமிழ் பேசுபவர்கள் எல்லாம் பின்வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள்' என்று கூறியவர், 'தமிழ் தெரிந்தவர்கள் இக்கூட்டத்திற்கு வந்தால் என்ன' என ஆதங்கப்பட்டார்.பத்திரிகையாளர்களிடம் பேசிய வெங்கடேசன், 'பா.ஜ., அரசு மீண்டும் பொறுப்பேற்று ஓராண்டு ஆகவுள்ள நிலையில் இக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆட்சி அமைந்த 4 மாதங்களில் நடத்தி இருக்க வேண்டும். எம்.பி.,க்கள் சொல்வதை கேட்டு வேலை செய்ய ரயில்வே துறை சுணக்கம் காட்டுவதாக தெரிகிறது' என குற்றம்சாட்டினார். இதுகுறித்து வைகோவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, 'காலதாமதமாக கூட்டம் நடத்தப்படவில்லை. எப்போதும் போல்தான் நடந்தது' என்றார்.

அண்ணாமலை குறித்து புகார்

வெங்கடேசன், மாணிக்கம்தாகூர் கூறுகையில், ''பாம்பன் புதிய பாலம் திறப்பதற்கு இரு நாட்களுக்கு முன் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், முருகனுடன் அப்போதைய பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். மயிலாடுதுறை பகுதி திட்ட வளர்ச்சி குறித்த கூட்டத்தில் அண்ணாமலை எதன் அடிப்படையில் பங்கேற்றார். சம்பந்தப்பட்ட எம்.பி.,யை அழைக்கவில்லை. இது எம்.பி.,க்களை அவமதிக்கும் செயல். இதுகுறித்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் தெரிவிக்கப்படும்'' என்றனர்.இதற்கு பதில் அளித்த ரயில்வே அதிகாரிகள், 'மத்திய அமைச்சர்களுடன் அவர்(அண்ணாமலை) வரும்போது நாங்கள் எப்படி தடுக்க முடியும்' எனக்கூறினர். இதை எம்.பி.,க்கள் ஏற்கவில்லை.

'ஆப்சென்ட்' எம்.பி.,க்கள்

ரயில் தேவை, புதுப்புது வழித்தடங்கள் குறித்த தங்கள் தேவைகளை மத்திய அரசின் கவனத்திற்கு எம்.பி.,க்கள் கொண்டு செல்வார்கள் என மக்கள் நம்புகிறார்கள். அதுகுறித்து பார்லிமென்ட்டில் அவர்கள் பேசுவதாக தெரியவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தெற்கு ரயில்வே கூட்டத்திலாவது பேசுவார்கள் என எதிர்பார்த்தால் அதிலும் சிலர் பங்கேற்பதில்லை.நேற்று 'ஆப்சென்ட்' ஆன 7 எம்.பி.,க்கள் விபரம்: துாத்துக்குடி கனிமொழி, கரூர் ஜோதிமணி, சிவகங்கை கார்த்திக், அவரது தந்தை சிதம்பரம்(ராஜ்யசபா), ராமநாதபுரம் நவாஸ்கனி, பொள்ளாச்சி ஈஸ்வரசாமி, கேரளா கொல்லம் பிரேமசந்திரன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Umer farook
ஏப் 26, 2025 12:36

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையை நாசமாக்கி விட்டது.கோவையில் இருந்து சேலம் வரை இருந்த மெமோ ரயில் ஐந்து ஆண்டுகளாக இயக்கப்படுவதில்லை.கடந்த 10 ஆண்டுகளில் கோவைக்கு எந்த புதிய ரயில்களும் பெரிதாக வந்ததில்லை.


Seyed Omer
ஏப் 25, 2025 19:23

தென்னக ரயில்வே துறை மூலம் அதிக வருவாயை ஈட்டி தரும் தென் மாவட்டங்களை புறக்கணிக்கும் ரயில்வே துறை முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கண்ணியாகுமரிக்கு இரட்டை வழிப்பாதை ரயில் பாதை எப்போது முடிவு பெறும் .மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு எப்போது ரயில் பாதை அமைக்கப்படும் .மேலும் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூருக்கு ரயில் பாதை அமைக்கப்படும்.


venugopal s
ஏப் 25, 2025 17:33

அண்ணாமலையை ரயில்வே ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்தது தவறு!


M Ramachandran
ஏப் 25, 2025 14:31

தீ மு க்கா என்றாலே மக்களை மதிக்க தெரியாத ஜென்மங்கள். மற்ற அதனுடன் சேர்ந்து எரிய கொள்ளியில் பிடுங்கினது ஆதாயம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைமென்று காங்கிரஸ் திருட்டு மா கட்சி தற்குறிகளாக மாறிய கம்யூனிஸ்டுகள் சைக்கோ இப்போ அட்ரஸ் இல்லாத லெட்டர் பேட் கட்சி.


lana
ஏப் 25, 2025 11:09

அண்ணே நம்ம முக்கிய முந்திரி அதான் முதல்வர் அவருக்கே தமிழ் துண்டு சீட் பார்த்து படிக்க மட்டுமே தெரியும். அதிலும் அறுபத்தி நாலாயிரத்து நூற்று இருபத்தி நாலாயிரம் கோடி என்ற அளவுக்கு தெரியும். முன்னாள் நிதி அமைச்சர் இரு மொழி கொள்கை வேந்தர் ptr க்கு நிதிநிலை அறிக்கை படிக்கும் போதே தமிழ் விளையாடும். இன்னும் ஒரு சில mla க்கள் சட்ட மன்றத்தில் பேசுவது கன்னடத்தில். இந்த நிலையில் நாம் அடுத்தவன் ஐ பார்த்து தமிழ் தெரியுமா என்று கேள்வி. இதை முதலில் உங்கள் முந்திரி களிடம் கேளுங்க. பிறகு மற்றவர்கள் மீது பாயலாம்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஏப் 25, 2025 09:56

இன்னும் இந்த கூமுட்டைகள் எம்பிக்கள் நமக்காக பேசுவார்கள் என்று மக்கள் நம்பினால் அவர்களை போல் அறிவிலிகள் யாருமில்லை. தமிழகத்தில் ரயில் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கே வந்து குவிகிறார்கள். ஆனால், 1947 ல் இருந்த ரயில்களை போல குறைந்த அளவில் மட்டுமே இயக்குகிறார்கள். போதுமான ரயில்களை இயங்குவதில்லை. இதை நிரூபிப்பதற்கு தமிழகத்தின் தென் மாவட்ட ரயில்கள் எப்போதும் காத்திருப்பு பட்டியலில் இருப்பதையே கூறலாம். அதை இங்கே இருக்கும் எம்பிக்கள் யாரும் கேட்பதில்லை. காரணம், தங்களுடைய பினாமிகள் நடத்தும் ஆம்னி பேருந்தில் கொள்ளையடிக்க முடியாது என்பதால்தான். மேலும், ரயில்வேயில் உள்ள மற்ற மாநிலத்தை சேர்ந்த சில அதிகாரிகளும் கையூட்டு பெற்றுக்கொண்டு தேவையான ரயில் சேவைகள் தமிழக மக்களுக்கு கிடைக்காமல் செய்கின்றனர். அப்புறம் தன் பங்கிற்கு தட்கல், ப்ரீமியம் தட்கல் என்று கூறி மக்களிடம் கறக்கிறார். அதனால், போதுமான ரயில்களை இயக்காமல் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகிறார்கள். இதுதான் காரணம்.


ஆரூர் ரங்
ஏப் 25, 2025 09:29

பயணிகள் ரயில்களை இயக்குவதால் நஷ்டம்தான். சரக்கு ரயில்களுக்கு கிராக்கி அதிகமானால் மட்டுமே லாபம் ஈட்டி அதில் புதிய பயணிகள் ரயில் விட முடியும். அதற்கு எந்த எம்பியும் ஆலோசனை கூறியதாகத் தெரியவில்லை.


ஆரூர் ரங்
ஏப் 25, 2025 09:21

எவ்வித அரசுப் பதவியிலும் இல்லாத சோனியா, கருணாநிதி படங்களுடன் UPA அரசின் விளம்பரங்கள் வெளியிடப்பட்டது நினைவிருக்கிறதா? அதற்கான செலவுகளை அந்தந்தக் கட்சிகள் அளிக்குமா? பிரதமராக நேரு அன்னியப் பயணங்கள் சென்ற போதெல்லாம் அவருடன் அப்போது எப்பதவியிலும் இல்லாத இந்திரா உல்லாசப் பயணம் சென்றது பற்றி காங்கிரஸ் விளக்கட்டும்.


Dharmavaan
ஏப் 25, 2025 09:13

இவனுக்கெல்லாம் எதற்கு சம்பளம், படி, வசதிகள் தண்டம் இதற்கு யாரும் கோர்ட்டுக்கு போவதில்லை வரிப்பணம் வீண்


திராவிடர்
ஏப் 25, 2025 08:49

ரயில் நிலையங்களில் திராவிட கோட்பாடு அடிப்படையில் டாஸ்மாக் திறக்க வேண்டும் என்று நமது எம்பி குழுவினர் கேட்டார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை