உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இமயமலையில் நம்ம முருகன் கோவில்

இமயமலையில் நம்ம முருகன் கோவில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இமயமலை தொடரில் உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது கிரவுஞ்ச மலை. மொத்தம், 12 ஆயிரம் அடி உயரமுள்ள மலையில் உச்சியில் இருக்கிறது கார்த்திகேய சுவாமி கோவில். இந்த கார்த்திகேய சுவாமி வேறு யாரும் இல்லை; தமிழகத்தில் அறுபடை வீடு கொண்ட நம்ம முருகப் பெருமான்தான்.திருவிளையாடல் புராணம் நாம் அறிந்தது தான். கயிலாயத்தில் சிவனும், பார்வதியும் தங்கள் குழந்தைகளான முருகனுக்கும், விநாயகருக்கும் போட்டி வைத்தனர். இந்த உலகை ஏழு முறை யார் சுற்றி முதலில் வருகின்றனரோ அவர்களுக்கு அரிய பரிசு என்பது தான் அந்த போட்டி.முருகப்பெருமான் உடனே தன் வாகனமாக மயில் மீது ஏறி, உலகை ஏழு முறை சுற்றி வருகிறார். அதற்குள், விநாயகர் தன் மதிநுட்பத்தை பயன்படுத்துகிறார். 'தாய், தந்தை தானே உலகம். அப்படியானால், தாய், தந்தையை சுற்றினால் உலகை சுற்றியதாகதானே அர்த்தம்' எனக் கேட்க, சிவனும், பார்வதியும், 'ஆம்' என்க, தாய், தந்தையை சுற்றி பரிசை பெற்று விடுகிறார் விநாயகர்.உலகை சுற்றிவிட்டு வந்த முருகன், விநாயகருக்கு பரிசு கொடுக்கப்பட்டதை அறிந்து, மிகவும் கோபம் அடைகிறார். கோபத்துடன் தென் மாநிலத்தில், குறிப்பாக தமிழகம் வந்தார்; பழநி மலைக்கு வந்தார்; அவரை சிவனும், பார்வதியும் சமாதானம் செய்தனர் என்பது, நாம் அறிந்த தகவல் தான்.ஆனால், பரிசு அபகரிக்கப்பட்டதாக வெகுண்டெழுந்த முருகன், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு, தன் உடலில் உள்ள சதைகளை எல்லாம் அழித்து, எலும்புடன் வந்து, உடலை வருத்தி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மலையில் கடும் தவம் புரிந்தார்.அவரை சிவனும், பார்வதியும் சமாதானம் செய்தனர்; அதன் பின் தான் அவர் தென் மாநிலத்திற்கு, குறிப்பாக தமிழகம் வந்தார். கந்தபுராணத்தில் வரும் கிரவுஞ்ச மலை என்பது, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மலை தான் என்று, அம்மாநில சுற்றுலாத்துறை, புராண வரலாறுகளை சுட்டிக்காட்டி, உறுதிப்படுத்துகிறது.அதற்கேற்பவே, கிரவுஞ்ச மலையில் அருள்பாலிக்கும் முருகன், உருவமற்று அரூபமாக காட்சி தருகிறார். இவரை கார்த்திகேய சுவாமி என, வட மாநிலத்தில் போற்றி கொண்டாடுகின்றனர்.

மாநில அரசு முயற்சி

கார்த்திகேய சுவாமிக்கும், தென் மாநிலங்களுக்குள் உள்ள தொடர்பை வெளிப்படுத்தவும், தென் மாநிலங்களின் முருக பக்தர்கள், கிரவுஞ்ச மலையை நோக்கி வர வைக்கும் முயற்சியில், உத்தரகண்ட் மாநில சுற்றுலாத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.இதற்காக, தமிழக ஆதீனங்களை எல்லாம் அழைத்து, கார்த்திகேய சுவாமிக்கு, 108 சங்காபிேஷக நிகழ்ச்சியை, கடந்த மே 16ல், முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை அன்று நடத்தியது. கோவை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ஆரூர் சுப்பிரமணிய குருக்கள் தலைமையில், 20 பேர் குழுவினர் சிறப்பு யாகசாலை பூஜை, சங்காபிேஷகத்தை நடத்தினர். கார்த்திகேய சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன.திருப்பரங்குன்றம், சுவாமிமலை முருகன் கோவில்களில் இருந்து, துணை ஆணையர்கள் உமா மகேஸ்வரி, சுரேஷ் ஆகியோர், சுவாமி மீது போர்த்தப்பட்ட வஸ்திரங்களை கொண்டு வந்திருந்தனர். அவை, கார்த்திகேய சுவாமிக்கு சார்த்தப்பட்டு, பூஜைகள் நடந்தன.தமிழகத்தில் இருந்து, சிரவை குமரகுருபர சுவாமிகள், பேரூர் மருதாச்சல அடிகளார், மயிலம் சுவாமிகள் உள்ளிட்ட ஆதீனங்கள், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களும் பங்கேற்றனர்.இதில் பங்கேற்ற, உத்ரகாண்ட் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மஹாராஜ் பேசுகையில்,''கார்த்திகேய சுவாமிக்கும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் ஆன்மிக ரீதியாக தொடர்புகள் புராணங்கள் வாயிலாக உறுதியாகிறது. தென் மாநிலங்களில் உள்ள முருக பக்தர்கள், கிரவுஞ்ச மலைக்கு வர வேண்டும். வடமாநில பக்தர்கள், தென் மாநிலங்கள் சென்று, முருகனை தரிசிக்க வேண்டும். இதற்கான முன் முயற்சிகளை சுற்றுலாத்துறை மேற்கொண்டு வருகிறது,'' என்றார்.மேலும்,''சுற்றுலா பயணியரை ஈர்க்கும் வகையில், கார்த்திகேய சுவாமி கோவில், அதை சுற்றிய பகுதிகள் தேவையான வசதிகளுடன் மேம்படுத்தப்படும். கார்த்திகேய சுவாமி கோவில், தேவி கோவில், அகஸ்தியர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் சுற்றுலா திட்டத்தில் இணைக்கப்படும்,'' என்றார்.தமிழகத்தில் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக போற்றப்படுகிறது. வடமாநிலமான உத்தரகாண்டிலும், இந்த நடைமுறை உள்ளது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

பரவச அனுபவம்

ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மைய பகுதியில் இருந்து, 60 கி.மீ., பயணம் சென்றால், கனக சவுரி என்ற கிராமத்தை அடையலாம். அங்கிருந்து, 3.5 கி.மீ., துாரம், டிரெக்கிங் என்ற மலைப் பயணம் மேற்கொண்டு, கார்த்திகேய சுவாமி கோவிலை சென்றடையலாம். கோவில் அருகே மட்டும், 0.5 கி.மீ., துாரம் படிக்கப்பட்டில் பயணிக்க வேண்டும்.கிரவுஞ்ச மலையில் உச்சி என்பதால், சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சம் மலைகள் தான். அங்கிருந்து கேத்ரிநாத், பத்ரிநாத் கோவில் மலைகளை காண முடிகிறது. பனி படர்ந்த மலைகளும், குளிர்ந்த காற்றும் மனதை மயக்கும் வகையில் உள்ளது. இந்த அற்புதமான சூழலில், கார்த்திகேய சுவாமியை தரிசிப்பது, பரவச அனுபவத்தை தரும்.

'நல்ல அனுபவமாக இருக்கும்'

உத்தரகண்ட் மாநில சுற்றுலாத்துறை கூடுதல் செயலராக செயல்பட்டு வரும் தமிழகத்தை சேர்ந்த ரவிசங்கர் கூறியதாவது: உத்தரகண்ட் மாநிலத்தில், இமயமலை தொடரில் கிரவுஞ்ச பருவத மலை உள்ளது. இமயமலையில் எல்லா மலைகளையும் பார்க்கும் வாய்ப்புள்ள இடங்களில் இந்த இடமும் ஒன்று. இங்கிருந்து பனி படர்ந்த எல்லா மலைகளையும் பார்க்க முடியும். திருவிளையாடல் புராணத்தில் நாம் படித்தபடி, தாய், தந்தையிடம் கோபித்துக் கொண்டு, கார்த்திகேய சுவாமி இங்கு தவம் புரிந்தார்; அதன்பின்தான், தமிழகம் சென்றதாக ஐதீகம். தமிழகத்தின் ஆன்மிக சிறப்புகளையும், இங்குள்ள கார்த்திகேய சுவாமி கோவில் சிறப்புக்களையும் பரிமாறிக் கொள்ளும் வகையில், 108 சங்காபிேஷக நிகழ்ச்சி நடந்துள்ளது. திருப்பரங்குன்றம், சுவாமிமலை கோவில்களில் இருந்து எடுத்து வந்த வஸ்திரங்கள், கார்த்திகேய சுவாமிக்கு சார்த்தும் நிகழ்ச்சி நடந்துள்ளது. அதுபோல், கார்த்திகேய சுவாமிக்கு சார்த்தப்பட்ட வஸ்திரங்கள், தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளில் உள்ள முருகனுக்கும் சார்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த டிரம்ஸ் சிவமணியின் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. கோவிலை பிரபலப்படுத்த வேண்டும் என்பது சுற்றுாலத்துறையின் முயற்சி. உத்தரகண்ட் வரும் தமிழக பக்தர்கள், கார்த்திகேய சுவாமி கோவிலுக்கு வர வேண்டும். இது நல்ல அனுபவமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

இப்படியும் செய்யலாம்!

மலைப்பாதையில் நடந்து செல்ல முடியாதவர்கள், டோலி எனப்படும் பல்லக்கில் செல்லலாம்; குதிரை சவாரியாகவும் செல்லலாம். இதற்கு, காலம், ஆளுக்கேற்ப கட்டணம் வசூலிக்கின்றனர். விரைவில், ரோப் கார் வசதி செய்யப்படும் என, சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தமிழக முருக பக்தர்களை வரவழைக்க முயற்சிக்கும் உத்தரகண்ட் சுற்றுலாத்துறை, கோவிலில் தமிழ் தெரிந்த அர்ச்சகர் அல்லது தொடர்பு அலுவலரை நியமிக்க வேண்டும். தமிழக, தென் மாநில பக்தர்களுக்கு கோவிலின் சிறப்பை எடுத்துக் கூறவும், தமிழில் அர்ச்சனைகள் செய்ய வழி வகை செய்யலாம். அப்படி செய்தால், சுற்றுலாத்துறையின் நோக்கம் விரைவில் நிறைவேறும்.

இங்கேயும் போகலாம்!

ருத்ரபிரயாக் மாவட்டத்தின் மைய பகுதியில் இருந்து, 4 கி.மீ.,ரில் உள்ளது, 1,000 ஆண்டுகள் பழமையான கோடேஸ்வரர் மஹாதேவ் கோவில். பஸ்மாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் புரிந்து, தான் யார் தலைமீது கை வைத்தாலும் அவர்கள் சாம்பலாகும் வகையிலான சாபத்தை பெற்றான். ஒரு கட்டத்தில் வரம் கொடுத்த சிவன் மீது கை வைக்க முயற்சிக்க, சிவன் இங்குள்ள குகைக்குள் அமர்ந்து தியானம் செய்ததாகவும், அதன்பின் விஷ்ணு பகவான், பஸ்மாசுரனை பேச்சால் மயக்கி, அவன் தலை மீதே கை வைக்க வைத்து, அவனை சாம்பலாக்கியதாக வரலாறு. அந்த இடம் தான் கோடேஸ்வரர் மஹாதேவ் கோவிலாக உள்ளது. குகைக்குள் சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். மலையில் இருந்து நீர் சொட்ட, அதை பிடித்து, குகைக்குள் இருக்கும் சிவனுக்கு பக்தர்கள் அபிேஷகம் செய்கின்றனர். ருத்ரபிரயாக் மாவட்டத்தில், பனிமலையில் இருந்து உருகி வரும் நீர், ஒருபுறம் அலக்நந்தா நதியாகவும், மற்றொருபுறம் நதியாகவும் வந்து, தேவி கோவில் அருகே சங்கமிக்கிறது. சங்கமிக்கும் சப்தமும், மலையில் உருண்டு வந்த கற்கள் அழகிய வடிவில் நிரம்பி இருப்பதும், சுற்றியுள்ள அழகிய மலையும், தேவி, சிவன் கோவிலும் ரம்மியமான சூழலாக உள்ளது. இதுதான் கங்கை உருவாகும் இடம் என்பதால், பக்தர்கள் அதிகம் வந்து, நீராடி, மலர் துாவி, கங்கா ஆரத்தி எடுத்து, வழிபாடு செய்கின்றனர். உத்தரகண்ட் செல்வோர் இந்த இடங்களுக்கும் போகலாம்; பரவசம் பெறலாம்.

- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை