பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகிய அ.தி.மு.க., சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற முயற்சித்து வரும் நிலையில், பெரும்பான்மை மக்களின் ஆதரவையும் இழந்து விடக் கூடாது என்பதில், உறுதியாக உள்ளது.அ.தி.மு.க., முடிவால், தங்களுக்கு பக்கபலமாக உள்ள சிறுபான்மையினர் ஓட்டுக்கள் இடம் மாறி விடக் கூடாது என எண்ணும் தி.மு.க., தரப்பு, 'அ.தி.மு.க., - பா.ஜ., மறைமுக கூட்டணி தொடர்கிறது. கூட்டணி முறிவு என்பது நாடகம்' என்று தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.இதை முறியடிக்க, 'லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல, 2026 சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., உறவு கிடையாது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டவட்டமாக கூறி வருகிறார்.அதன் தொடர்ச்சியாக, பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள், அ.தி.மு.க.,வுடன் நெருக்கம் காட்ட துவங்கின. மதுரையில் நடந்த, எஸ்.டி.பி.ஐ., கட்சி மாநாட்டில், பழனிசாமி பங்கேற்றார். சிறுபான்மை மக்களை கவர, நீண்ட காலமாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அ.தி.மு.க., பொதுக்குழுவிலும், அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க, பழனிசாமிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. பங்கேற்றால் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதால், அவர் செல்லவில்லை; அ.தி.மு.க., சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பதற்காக, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தன்று, பழனிசாமி கன்னியாகுமரி சென்றார். முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் செய்த ஏற்பாட்டின்படி, கன்னியாகுமரி அருகே உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதிக்கு சென்றார்.அங்குள்ள வழக்கப்படி மேல் சட்டையை கழற்றி விட்டு உள்ளே சென்றார். அவருக்கு பதி சார்பில், தலைப்பாகை அணிவித்து, திருநாமம் பூசப்பட்டது. தலைமைப் பதியில் தரிசனம் செய்த பழனிசாமி, அன்னதானத்தை துவக்கி வைத்தார்; பசு தானம் வழங்கினார். அதன்பின், நாகர்கோவில் அனந்த நாடார் குடியிருப்பு பகுதியில் நடந்த, அ.தி.மு.க., பிரமுகர் இல்ல திருமண விழா, மார்த்தாண்டத்தில் நடந்த மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்றார்.அங்கு பேசிய பழனிசாமி, 'அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. ஜாதிக்கு அப்பாற்பட்ட கட்சி. அவரவர் மதம், அவரவருக்கு புனிதமானது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில், என்ன நடைமுறையை கையாண்டனரோ, அதையே அவர்கள் மறைவுக்கு பின், அ.தி.மு.க., தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. மக்களுக்கு ஆபத்து என்றால் ஓடி வந்து உதவும் கட்சி அ.தி.மு.க.,தான்' என்றார்.அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'அனைத்து தரப்பு மக்களையும் கவர, பழனிசாமி முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். இது, எந்த வகையில் கை கொடுக்கும் என்பது, தேர்தலில் தெரியவரும்' என்றார்- நமது நிருபர் -.