தமிழக அரசு விரைவு போக்குவரத்து பஸ்களில், 5 முதல், 30 ரூபாய் வரை, எந்த அறிவிப்புமின்றி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், பயணியர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், தமிழக முக்கிய நகரங்கள் இடையேயும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், 1,120 தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த பஸ்கள் கட்டண உயர்வை அரசு நிர்ணயித்து, அதிகாரப்பூர்வமாக அறிவித்து அமல்படுத்துவது வழக்கம். பின், சுங்கச்சாவடி, டீசல், டயர் உள்ளிட்ட உதிரிபாகம் விலை உயர்வு, அனுமதி உள்ளிட்ட அரசு ஆவணங்களின் கட்டணம் உயர்ந்த போதும், மக்கள் நலன் கருதி, பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை.இந்நிலையில், பொங்கல் முதல் பஸ்களின் கட்டணம், 5 முதல், 30 ரூபாய் வரை எந்த அறிவிப்புமின்றி உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சில் சென்னை - சேலம் இடையே கட்டணம், 300ல் இருந்து, 310 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல் சேலம் - நெல்லை இடையே, 425ல் இருந்து, 430 ரூபாய், நெல்லை - ஓசூர் கட்டணம், 590ல் இருந்து, 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.குறிப்பாக, 580, 590 என முடியும் கட்டணத்தை, 600 ரூபாயாகவும், துாரம், பஸ்சின் வசதியை பொறுத்து, அதிகபட்சம், 30 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சில்லரை பிரச்னையை காரணம் காட்டி கட்டணத்தை உயர்த்தியது, பயணியர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.டிரைவர், கண்டக்டர்கள் கூறுகையில், 'அதிகாரிகள் வாய்மொழி உத்தரவுப்படி, புது கட்டண அட்டவணை வழங்கப்பட்டுள்ளது. அதில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை வசூலிக்கிறோம்' என்றனர்.விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் கூறுகையில், ''புதிதாக சென்னை, கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து பஸ்கள் இயங்க துவங்கிய நிலையில், பஸ் கட்டண அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது. அதில் சில இடங்களில் தவறு நடந்துள்ளது. ''அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை,'' என்றார்.
மறுப்பு
எஸ்இடிசி வெளியிட்ட அறிக்கையில், பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வரும் தகவலில் உண்மை இல்லை என விளக்கமளித்து உள்ளது.- நமது நிருபர் -