கரூர்: 'த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரணை தேவை' என, தேசிய ஜனநாயக கூட்டணி உண்மை கண்டறியும் ஆய்வுக்குழு வலியுறுத்தி உள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த, 27ம் தேதி இரவு, த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட, 41 பேர் இறந்தனர், 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்நிலையில், பா.ஜ.,- எம்.பி., ஹேமமாலினி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உண்மை கண்டறியும் ஆய்வுக் குழு, கரூரில் நேரடியாக விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டது
இதில் எம்.பி.,க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, முன்னாள் டி.ஜி.பி.,யான பிரஜ் லால், சிவசேனா கட்சியின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா, தெலுங்கு தேசம் கட்சியின் புட்ட மகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் நேற்று கரூருக்கு வந்தனர். வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின், கரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
இதன் பின், ஹேமமாலினி அளித்த பேட்டி:
பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களையும், தனித்தனியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் தனித்தனியாக பேசி, அவர்களுடைய கருத்துக்களை பதிவு செய்து கொண்டோம். விஜய் பிரசார கூட்டத்தின் போது பலி சம்பவம் குறித்து, உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டறியவே குழுவாக வந்துள்ளோம். நடிகர் விஜயை பார்க்கவே பெண்கள், சிறுமியர் என பலரும் வந்துள்ளனர். பெரிய நடிகர் ஒருவரின் பிரசாரக் கூட்டத்திற்கு குறுகிய சாலையில் இடம் கொடுத்துள்ளனர். அது சரியான அணுகுமுறை அல்ல. கரூரில் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, அந்தப் பகுதி முழுதும் மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை வைத்துப் பார்க்கும்போது, நடந்த சம்பவங்கள் அனைத்தும் இயற்கையானது போல், தெரியவில்லை. நடிகர் விஜய் பேசுவதற்கு, பெரிய இடத்தில் அனுமதி கொடுத்திருந்தால், இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்காது. நடந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு ஏற்பது. குறுகலான இடத்தை தேர்வு செய்து, மாவட்ட நிர்வாகம் அங்கே பிரசாரம் நடத்த எப்படி அனுமதி கொடுத்தது என புரியவில்லை. என்ன நடந்தது என்பது குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்துள்ளோம். உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரணை தேவை. இவ்வாறு அவர் கூறினார். ஒரு வாரத்தில் அறிக்கை அடுத்தகட்டமாக, கரூர் மாவட்ட நிர்வாகத்தை சந்திக்கவிருக்கிறோம். சம்பவம் தொடர்பாக கேள்விகளை கேட்டு பதில் பெறுவோம். குறுகலான இடத்தில், எப்படி, 30,000 பேர் கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் போது, மாவட்ட நிர்வாகம், போலீஸ், கூட்ட ஏற்பாட்டாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என தெரியவில்லை. பா.ஜ., குழுவின் அறிக்கை, ஒரு வாரத்தில், கட்சியின் தேசிய தலைவர் நட்டாவிடம் அளிக்கப்படும். அவர், அரசுக்கு பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுப்பார். - அனுராக் தாகூர், எம்.பி., - பா.ஜ., விஜய் வந்த பின்பே நெரிசல் கரூர் வேலுச்சாமிபுரத்தில், பா.ஜ., - எம்.பி., ஹேமமாலினி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உண்மை கண்டறியும் ஆய்வுக் குழுவினர், நேற்று விசாரணை நடத்தினர். அப்போது, பொதுமக்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அவர்கள் தமிழில் பேசியதை, பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கூறினார். ஆய்வு குழுவினரிடம் பொதுமக்கள் கூறுகை யில், 'த.வெ.க., தலைவர் விஜய், சம்பவ இடத்துக்கு வந்து பேசத் துவங்கியதும் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர். அப்போது கூட்டத்தல் இருந்த சிலர், தண்ணீர் கேட்டு கூச்சலிட்டதால், விஜய் வந்த வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள் கூட்டத்தை நோக்கி வீசப்பட்டன. பின், தள்ளு, முள்ளு ஏற்பட்டது. மக்களை காப்பாற்ற போலீசார் வரவில்லை' என்றனர்.