சமூக வலைதளங்களில், தி.மு.க., அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதுடன், அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் எடுத்துரைக்கும்படி, தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.சமூக வலைதளங்கள் மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், அனைத்து கட்சிகளும் தகவல் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கி, அதில் படித்த இளைஞர் மற்றும் இளம்பெண்களை அதிக அளவில் சேர்த்து வருகின்றன.கோஷ்டி பூசல்
தமிழகத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க.,வில் முதன்முதலாக தகவல் தொழில்நுட்ப அணி உருவாக்கப்பட்டது. ஜெயலலிதா இருந்த வரை, அந்த அணியின் செயல்பாடு வேகமாக இருந்தது. அவரது மறைவுக்கு பின், கட்சியில் பிளவு ஏற்பட்டபோது, அணியிலும் பிளவு ஏற்பட்டது. கட்சி ஒன்றான போதும், கோஷ்டி பூசல் மறையவில்லை. தற்போது, தகவல் தொழில்நுட்ப அணியை பலப்படுத்த, பொதுச்செயலர் பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.ஜெயலலிதா காலத்தை போல, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலர் பதவியை உருவாக்கி, புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். மாநில செயலர் ராஜ்சத்யன் தலைமையில், தகவல் தொழில்நுட்ப அணியை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. பூத் கமிட்டி ஒவ்வொன்றிலும், தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கட்சியின் செயல்பாடுகளை, மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும், தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், 'டிஜிட்டல் காலண்டர்' தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு தேதியிலும், அ.தி.மு.க., ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த விபரம் இடம் பெற்றுஉள்ளது.அறிவுறுத்தல்
காலண்டரில் குறிப்பிடப்படும் தகவல்களை, தினமும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும். முக்கியநிகழ்வுகளை, 'ஹேஷ்டேக்' வாயிலாக வெளியிட வேண்டும்.அதேபோல, தி.மு.க., அரசின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டும்.தி.மு.க.,வினர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், சமூக வலைதளங்களில் அ.தி.மு.க., அரசு நிறைவேற்றிய திட்டங்களை வெளியிட்டு வருகின்றனர்.- நமது நிருபர் -