சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில், 'டாஸ்மாக்' மதுக்கடைகள் மீண்டும் துவக்கப்படுவது, நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், 6,600 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் செல்லும் வாகனங்களிடம், கட்டணம் வசூல் செய்ய, 67 இடங்களில் சுங்கச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. நாட்டில் அதிக சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் நிகழும் மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், 60,000க்கும் மேற்பட்ட சாலை விபத்து கள் நடக்கின்றன.இதில், 18,000 முதல் 20,000 பேர் வரை உயிரிழக்கின்றனர். கட்டுப்பாடுகள்
அதிக வேகமாக வாகனத்தை ஓட்டுதல், மதுபோதை, சாலை உள்கட்டமைப்பு சேதம், வாகனம் ஓட்டும் போது மொபைல்போன் பயன்பாடு, அதிக எடையை ஏற்றி செல்லுதல், மோசமான வானிலை, பாதசாரிகள் கவனக்குறைவு, சாலை விதிகளை மதிக்காமை உள்ளிட்டவை விபத்து நடப்பதற்கு முக்கிய காரணங்கள். மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைக்க, ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. மது அருந்தி வாகனம் ஓட்டுவதால், தமிழகத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், மதுக்கடைகளை திறக்க, உச்ச நீதிமன்றம் 2018ல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து, அ.தி.மு.க., ஆட்சியில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளின் கதவுகள் மட்டும், பின்பக்கமாக மாற்றி அமைக்கப்பட்டன. தற்போது, தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி, மதுக்கடைகள் புதிதாக திறக்கப்படுகின்றன. உதாரணமாக, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சாமியார் மடத்தில், சில நாட்களுக்கு முன், தேசிய நெடுஞ்சாலையை பார்த்தபடி, டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல்
இதுபோல, தேசிய நெடுஞ் சாலைகளில், மதுக்கடைகள் திறக்கப்படுவதால், விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களால், குடும்பத்தோடு பயணிப்பவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. ஆனால், இவ்விஷயத்தில், தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் செயலால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தமிழக பிரிவு அதிகாரிகள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும், தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுத முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.