முரண்டு பிடிக்கும் பா.ம.க., முட்டி மோதும் தே.ஜ., கூட்டணி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
இரு பிளவாக பிரிந்து நிற்கும் பா.ம.க.,வின் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரையும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தனித்தனியாக பேச்சு நடத்தி வரும் தக வல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2021ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி யில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., 5 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பா ராமதாஸ், மகன் அன்புமணி இருவரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பா.ம.க., ராமதாஸ், பா.ம.க., அன்புமணி என இரண்டாக கட்சி பிளந்து நிற்கிறது. இதையடுத்து, பிரமாண்ட மாநாடுகளை இரு தரப்பும் நடத்தி முடித்திருக்கின்றன. 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் அன்புமணி, தமிழகத்தின் பிரதான நகரங்களில் நடைப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து, அவர்களுடைய குறைகளை கேட்டார். அதேநேரம், ராமதாசும் வேகம் கொஞ்சம் கூட குறையாமல், மக்களை சந்திப்பதில் தீவிரமாக இருக்கிறார். மாறி மாறி பேச்சு இதற்கிடையில், அன்புமணியை பா.ம.க., தலைவராகவும், அவர் வசித்த சென்னை, தி.நகர், திலக் தெரு இல்லத்தை கட்சியின் தலைமையிடமாகவும் தேர்தல் கமிஷன் அங்கீகரித்திருக்கிறது. அது செல்லாது என, ராமதாஸ் தரப்பு போர்க்கொடி உயர்த்தி, டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு, முடிவுக்காக காத்துள்ளனர். இந்நிலையில், இரு தரப்பையும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்து கூட்டணியை பலப்படுத்தும் தீவிரத்தில் அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் மாறி மாறி பேச்சு நடத்தி உள்ளன. தமிழக அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: வன்னியர் சமுதாய மக்கள் மத்தியில் பா.ம.க.,வுக்கு செல்வாக்கு இருந்தது. இதனால் அக்கட்சி, வட மாவட்டங்களில் மட்டும் 4.5 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று வந்தது. ஆனாலும், கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின், அக்கட்சியின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது. இதற்கிடையில், கட்சியின் முக்கிய தலைவர்களாக இருக்கும் அன்புமணியும், ராமதாசும் தனித்தனியாக பிரிந்து நிற்பதால், வன்னிய இன மக்களும் இரு தரப்புக்கும் பிரியும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால், இரு தரப்பையும் ஒன்றாக்கும் முயற்சியில், பா.ஜ.,வை சேர்ந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசனையில், தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் ஈடுபட்டனர். இருவரும் ஒன்று சேர மறுத்ததை அடுத்து, அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதையடுத்து, ராமதாஸை தங்கள் பக்கம் கொண்டு செல்ல, தி.மு.க., தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. திருமாவளவன், தி.மு.க., கூட்டணியில் இருப்பதை அடுத்து, 'அது தனக்கு சரிபட்டு வராது' என ராமதாஸ் கூறி விட்டார். இம்முறையும் 23 சீட் இந்த விஷயத்தை மோப்பம் பிடித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தன்னுடைய நண்பரும் சேலம் புறநகர் அ.தி.மு.க., மாவட்டச்செயலருமான இளங்கோவன் வாயிலாக, ராமதாஸ் தரப்பின ரிடம் பேச வைத்தார். அத ற்கு, 'கூட்டணிக்கு தடையில்லை; ஆனால், கடந்த 2021 சட்டசபைத் தேர்தலைப் போல, பா.ம.க.,வுக்கு இம்முறையும் 23 சீட்கள் வழங்க வேண்டும்' என ராமதாஸ் தரப்பினர் கூறியுள்ளனர். இதே போல, அன்புமணியிடம் பா.ஜ., தரப்பிலிருந்து பேசியுள்ளனர். அவர்களிடம், ராமதாஸ் வைத்த கோரிக்கையையே அன்புமணியும் வைத்துள்ளார். அதிக சீட்களைக் கேட்பதோடு, ராஜ்யசபா சீட்டும் கேட்டு, ராமதாஸ் - அன்புமணி என இருவரும் நெருக்கடி கொடுப்பதால், இந்த விஷயத்தை அடுத்து எப்படி 'டீல்' செய்வது என புரியாமல், கூட்டணி தொடர்பாக பேசுவதை அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதற்கிடையில், விரைவில் தமிழகம் வர இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரு தரப்பினரையும் அழைத்து பேசி, சுமூக தீர்வு ஏற்படுத்துவார் என தெரிகிறது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின -நமது நிருபர்-:.