உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விழலுக்கு இறைத்த நீராகும் அரசின் உதவித்தொகை! வேறு நலத்திட்டங்களுக்கு மடை மாற்ற எதிர்பார்ப்பு

விழலுக்கு இறைத்த நீராகும் அரசின் உதவித்தொகை! வேறு நலத்திட்டங்களுக்கு மடை மாற்ற எதிர்பார்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : 'மாற்றுத்திறனாளிகளை தவிர்த்து, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகையை, வேறு நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்த வேண்டும்' என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.கடந்த 2006ம் ஆண்டு முதல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்பும், வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது.இந்த திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300, தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200, பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 400, பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 600 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு 600, மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு 750, மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு 1,000 ரூபாய் வீதம் மாதந்தோறும் வங்கிக் கணக்கில், இன்றளவும் செலுத்தப்படுகிறது.இந்த உதவித்தொகை பெற்றால், அரசின் மற்ற உதவித் தொகை கிடைக்காது என்ற நிபந்தனை, சமீப காலத்தில் விதிக்கப்பட்டதால், உதவித்தொகை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது.மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டம் கை கொடுக்கும் நிலையில், மற்றவர்கள் ஏதாவது ஒரு வகையில் வேலை வாய்ப்பு பெற்று வரும் நிலையில், எதற்காக இத்தொகை ஒதுக்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.இதில், மாற்றுத்திறனாளிகளை தவிர்த்து, ஒரு மாவட்டத்தில் குறைந்தபட்சம், 200 பேருக்கு, வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 350 ரூபாய் மாதத்துக்கு கணக்கிட்டாலும், 200 பேருக்கு, ஆண்டுக்கு 8.40 லட்சம் செலவிடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டத்தில், 200 பேருக்கு கணக்கிட்டாலும், ஓராண்டுக்கு , 3.19 கோடி செலவிடப்படுகிறது.மூன்று வருடங்களுக்கு, இத்தொகை பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலையில், மூன்று வருடங்களையும் சேர்த்தால், 10 கோடிக்கு மேல் தாண்டி விடும். வேலை வாய்ப்பு இல்லாத நிலையை உருவாக்க, இளைஞர்களுக்கு தொழில் கடன், தொழில் துவங்க பயிற்சி என, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், இத்தொகை வழங்கப்படுவது தேவைதானா? இதைக் கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கும், மற்ற நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்தலாமே என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறை தீரும்

வேலை வாய்ப்பற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் பணியை மேற்கொள்ள, 2006ம் ஆண்டு, இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், உதவியாளர், அலுவலக உதவியாளர், தட்டச்சர் நியமிக்கப்பட்டனர். தட்டச்சருக்கு தொகுப்பூதியம் வழங்கப்படும் நிலையில், மற்றவர்களுக்கு, அரசு ஊதியம் வழங்கப்படுகிறது.சில மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில், இந்த எண்ணிக்கை கூடுதலாகவும் உள்ளது. தற்போது, உதவித்தொகை பெறும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கும், பணி என்பது குறைந்தே போனது. இப்பணியை மேற்கொள்ள, அலுவலகங்களில் இருப்பவர்களை வைத்தே மேற்கொள்ளலாம் என்ற நிலையில், பணியாளர் பற்றாக்குறையில் தவிக்கும் மற்ற அரசு அலுவலகங்களில், இவர்களை பணியமர்த்தினால், அங்கு பணிச்சுமையால் அவதிப்படும் பணியாளர்களின் பாரம் குறையும்.அரசு அலுவலகங்களுக்கு பணி நிமித்தமாக செல்லும் பொதுமக்களுக்கு, விரைவான நிவாரணமும் கிடைக்கும். எனவே, தமிழக அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S Sivakumar
ஜூன் 14, 2024 13:14

இந்த செய்தி நல்ல எண்ணத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதையும் நடைமுறை படுத்த வகையில் நம்முடைய மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் பச்சை வண்ணத்தில் கையொப்பம் இடும் அதிகாரிகள்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி