''அமைச்சர் உதயநிதியை விமர்சித்த, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து, கட்சியின் உயர்நிலை குழுவில் விவாதிக்கப்படும்,'' என்கிறார் அக்கட்சித் தலைவர் திருமாவளவன்.தனியார் தொலைக்காட்சிக்கு ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டியில், 'நான்கு ஆண்டுகளுக்கு முன் சினிமா துறையிலிருந்து, அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும்போது, 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா' என்றார். முற்று பெறவில்லை
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டி, தி.மு.க., மேலிடத்திற்கு அதிர்ச்சி அளித்தது.உதயநிதியை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா மீது, திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராஜா வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக திருமாவளவன் அளித்த பேட்டி:
தி.மு.க.,வுக்கும், வி.சி.,க்கும் இடையே எந்த சலசலப்பும் இல்லை: எந்த விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாக வாய்ப்பும் இல்லை. என் சமூக வலைதள பக்கத்தில் பதிவான ஒரு சிறிய வீடியோவில் இருந்த, 'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு' என்ற கருத்து மீண்டும் வெளியாகி, பரபரப்பான விவாதத்திற்கு வித்திட்டிருக்கிறது. அந்த விவாதம், சாதாரணமாக முற்று பெறவில்லை; மேலும் மேலும் விவாதங்களுக்கு இடமளித்து, அது சர்ச்சைக்குரிய கருத்தாக்கப்பட்டு விட்டது.இந்த நிகழ்வால் தி.மு.க.,வுக்கும், வி.சி.,க்கும் இடையில் எந்த சிக்கலும் எழாது; எழுவதற்கும் வாய்ப்பு இல்லை. தி.மு.க., கூட்டணி உறவில் எந்த நெருடலும் இல்லை.தனிநபருக்கு உரிமை
தி.மு.க., பவள விழாவில் பங்கேற்க, முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்; நாங்கள் பங்கேற்கிறோம். வரும் 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் மட்டுமின்றி, 2029 லோக்சபா தேர்தலையும் கருத்தில் வைத்து, கட்சி நலன், மக்கள் நலன் சார்ந்து கூட்டணியை வி.சி., முடிவு செய்யும்.ஒவ்வொரு தனி நபருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. கட்சியில் இருக்கும் ஒவ்வொரு தனி நபரும், அவரவர் கருத்துக்களை சொன்னாலும், அந்த கருத்துக்கள் மீது இறுதி முடிவெடுக்க வேண்டியது கட்சித் தலைமை தான்.கட்சித் தலைமை எடுக்கும் எந்த முடிவுக்கும், கட்சித் தொண்டர்கள் அனைவரும் கட்டுப்படுவர். ஆதவ் அர்ஜுனா கூட, 'கூட்டணி தொடர்பான முடிவை தலைமை எடுக்கும்; அதில் நான் தலையிட மாட்டேன்' என்றே சொல்லி இருக்கிறார்.கட்சி, கூட்டணி ஆகியவற்றிற்கு எந்த சேதமும் இல்லாமல் முடிவெடுக்கக்கூடிய பொறுப்பு எனக்கு உள்ளது. ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்து தொடர்பாக, கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்போம்.இது உட்கட்சி பிரச்னை என்பதால், பொதுச்செயலர்கள், துணை பொதுச்செயலர்கள் என, உயர்நிலை குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளுடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளேன். மீண்டும் நாங்கள் கலந்து பேசி, அது தொடர்பான முடிவுகளை எடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
சமூக நீதிக்கு இலக்கணம் ஜெயலலிதா!
சமூக நீதி குறித்து, தி.மு.க.,வின் துணை பொதுச்செயலர் ஆ.ராஜா பேசியிருக்கிறார். பெரம்பலுார் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆ.ராஜா, மறு சீரமைப்பில் அத்தொகுதி பொதுத் தொகுதியான பின், அங்கேயே போட்டியிடாமல் தனித் தொகுதியான நீலகிரி லோக்சபா தொகுதிக்கு ஓடியது ஏன்? கட்சித் தலைமையும், தலித் என்பதால் தானே, அவரை அங்கு விரட்டியது. தி.மு.க., தலைமையின் அந்த முடிவை எதிர்த்து ஆ.ராஜா போராடாதது ஏன்? ஆக, தி.மு.க.,வின் சமூக நீதி, சம நீதி என்ற போலி வார்த்தைகளை, ராஜா மட்டுமல்ல; அக்கட்சியில் இருக்கும் ஒவ்வொரு தலித்களும் உணர வேண்டும். அதே நேரம், பா.ம.க.,விலிருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்த தலித் எழில்மலையை, பொதுத் தொகுதியான திருச்சியில் நிறுத்தி வெற்றி பெற வைத்தவர் ஜெயலலிதா. அவர் சமூக நீதிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்.- ஆதவ் அர்ஜுனா, துணை பொதுச்செயலர், வி.சி., - நமது நிருபர் -