சென்னை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் இலக்குடன் களமிறங்கிய ஆர்.எஸ்.எஸ்., இயக்கம், பா.ஜ., கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=57smt5q7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2014, 2019ல் மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சி அமைக்க, உத்தர பிரதேசத்தைப் போல, மஹாராஷ்டிராவும் காரணமாக இருந்தது. ஆனால், 2024 லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 48 இடங்களில், பா.ஜ., கூட்டணிக்கு 17 இடங்கள் மட்டுமே கிடைத்தன. கடந்த 2014, 2019ல், 23 இடங்களில் வென்ற பா.ஜ.,வுக்கு, 2024ல் வெறும் ஒன்பது இடங்கள் மட்டுமே கிடைத்தன.இதனால், பா.ஜ.,வுக்கு லோக்சபாவில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், 2014, 2019 என, தொடர்ந்து இரு லோக்சபா தேர்தல்களில், பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்ததால், ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் துணை இன்றியே, 2024ல் வென்று விடலாம் என பா.ஜ., நினைத்தது. இணக்கம்அனைத்து கருத்துக் கணிப்புகளும், பா.ஜ., மட்டுமே 300 இடங்களை தாண்டி விடும் என சொன்னதால், சங் பரிவார் அமைப்புகளை பா.ஜ., கண்டுகொள்ளவில்லை. ஆனால், தேர்தல் முடிவுகள் பா.ஜ.,வுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தன. ஆனாலும், கூட்டணி கட்சிகளின் தயவில், மூன்றாவது முறையாக மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைத்தது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்டில் கேரள மாநிலம், பாலக்காட்டில் நடந்த சங் பரிவார் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில், பா.ஜ., -- ஆர்.எஸ்.எஸ்., இடையே நடந்த நீண்ட உரையாடலுக்குப் பின், இரு தரப்புக்கும் இணக்கம் ஏற்பட்டது. 'ஒற்றுமை இல்லையேல் வீழ்ச்சி' என்பதை இரு தரப்பும் புரிந்து கொண்டனர். அதன்பின், ஹரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் தீவிரமாக களப் பணியாற்றின. அதனால், யாரும் எதிர்பாராத வகையில், பா.ஜ., தனித்து ஆட்சியை தக்க வைத்தது.ஹரியானாவைப் போலவே, மஹாராஷ்டிராவிலும் கடந்த ஆகஸ்ட் மாதமே தேர்தல் பணிகளை ஆர்.எஸ்.எஸ்., துவக்கியது. ஆனாலும், பெரிய மாநிலம் என்பதால், வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது.ஆனால், கடைசியாக நடந்த மூன்று லோக்சபா, சட்டசபை தேர்தல் முடிவுகளை ஆராய்ந்த ஆர்.எஸ்.எஸ்., இந்த தேர்தலில், 3 - 5 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு அதிகம் நடந்தால், பா.ஜ., வெற்றி பெறும் என கணித்து, அதை இலக்காக வைத்து களப் பணியாற்றியது.அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., ஆதரவாளர்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் சேர்க்கப்பட்டனர். இளம் வாக்காளர்கள், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டனர்.கடந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் குறைந்த ஓட்டுகளில் தோற்ற தொகுதிகளில், ஓட்டுப்பதிவை அதிகப்படுத்த சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த லோக்சபா தேர்தலில், துளே தொகுதிக்கு உட்பட்ட ஐந்து சட்டசபை தொகுதிகளில், பா.ஜ., முதலிடத்தைப் பெற்றது. தீவிர பிரசாரம்ஆனால், அத்தொகுதிக்கு உட்பட்ட மாலோகான் சென்ட்ரல் சட்டசபை தொகுதியில், பா.ஜ.,வுக்கு வெறும் 4,542 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. காங்கிரஸ், 1.90 லட்சம் ஓட்டுகளை பெற்றது. இதனால், ஐந்து சட்டசபை தொகுதிகளில் முதலிடம் பெற்றும், லோக்சபா தேர்தலில் பா.ஜ., தோற்றது.துளே தொகுதியில் நடந்ததைக் கூறி, 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; இல்லையேல் அழிவு' என மஹாராஷ்டிரா முழுதும், சங் பரிவார் அமைப்புகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டன.சிறுபான்மையினரை போல, மற்றவர்களையும் அதிக அளவில் ஓட்டளிக்கச் செய்ய வேண்டும் என திட்டமிட்டு, ஆர்.எஸ்.எஸ்., செயலாற்றியது. அதனால், 2019 சட்டசபை தேர்தலை விட, 4 சதவீதம் அதிக ஓட்டுகள் பதிவாகின. அதன் விளைவாக, பா.ஜ., கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளதாக, அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.விரைவில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் மற்ற மாநிலங்களிலும் இதே பார்முலாவை பயன்படுத்தி, வெற்றி இலக்கை அடைய வேண்டும் என பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறுகின்றனர்.