உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிந்தனைக்களம்; திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?

சிந்தனைக்களம்; திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனின், 'ஆழ்வார்கள் ஆய்வு மையம்' சார்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், கோடான கோடி ஹிந்து மக்கள் போற்றி வணங்கும் வாழ்வியல் வழிகாட்டி, ஸ்ரீ ராமர் குறித்து கம்பன் கூறாத கருத்தை, வம்பன் போல் வைரமுத்து பேசியது, வன்மையாக கண்டிக்கக் கூடியது. 'கோ இயல் தர்மம் உங்கள் குலத்து உதித்தோர் கட்கு எல்லாம் ஓவியத்து எழுத வொண்ணா உருவத்தாய்; உடைமை அன்றோ? ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னர் திகைத்தனை போலும்' என்பது கம்ப ராமாயண பாடல். 'சித்திரத்தில் எழுத முடியாத வடிவுடைய உங்கள் குலத்தில் பிறந்தவருக்கு எல்லாம், அரசநீதி வலுவாக இருத்தல் கடமை அன்றோ. 'அவ்வாறு இருக்க, ராம பெருமான் அந்த நீதியை வழங்கியது எவ்வாறு? உனது உயிருக்கு உயிரான தேவியை சனகன் பெற்ற அன்னத்தை பிரிந்ததால் செயல் இதுவென்று அறியாது தடுமாறினாய் போலும்' என்பது கம்பன் கூறியது. ஆனால் வைரமுத்து, திராவிட மாடல் சிந்தையோடு யோசனை செய்து, 'சீதையை பிரிந்த காரணத்தால் ராமன், புத்தி சுவாதீனம் இழந்து விட்டான். புத்தி சுவாதீனம் இழந்தவன் செய்யும் குற்றம், இந்திய தண்டனைச் சட்டம் 84வது பிரிவின்படி குற்றம் ஆகாது என்று சொல்லுகிறது' என்கிறார். இந்திய தண்டனைச் சட்டம், புதிய பரிணாமம் பெற்று இருப்பது, வைரமுத்துவுக்கு தெரியவில்லை போலும். 'கம்பனுக்கு இந்திய தண்டனைச் சட்டம் தெரியாது; ஆனால் சமூகம் தெரியும். அதனால், குற்றவாளி ராமனை கம்பன் மன்னிக்கிறான். 'ராமன் மனிதர் ஆகிறான்; கம்பன் கடவுளாகிறான் என்று, வியாக்கியானம் கொடுக்கிறார். திகைத்தனை என்றால் மலைத்தனை என்று பொருள்; மதியிழப்பது அல்ல என்று அகராதி கூறுகிறது. ஆனால் வைரமுத்து, 'திகைத்தனை' என்ற சொல்லுக்கு, புத்தி சுவாதீனம் இழந்தவன் என்று பொருள் சொல்கிறார். இந்திய அரசியலமைப்பு சட்டம் மூலப் பிரதியின் அடிப்படை உரிமைகள் பற்றிய பகுதி- 3, ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோரின் விளக்க படத்தை கொண்டுள்ளது. ஸ்ரீராமர், மக்களின் உரிமைகளின் உண்மை காவலராக இருந்தார் என்று குறிப்பிடுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை படிக்காமல், நுனிப்புல் மேய்வது போல் ஸ்ரீராமனை குற்றவாளி என்று வைரமுத்து தீர்ப்புரை எழுதிப் பேசுவது, கம்பன் மீது பழி போடுவது எல்லாம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நேரடியாக அவமதிப்பது போல் இருக்கிறது. இதற்காகவே வைரமுத்து மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீராமன் குற்றவாளி என்றால் இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் குற்றம் உடையது என்று கூற வருகிறாரா? 'உலகிலுள்ளோர், ராமனை போற்றி வணங்கி துதித்து, தனக்கு கதிமோட்சம் தர மாட்டானா என்று ஏங்கித் தவிக்கும்போது, அந்த அறத்தின் வடிவமே என்னை தேடி வந்து வீடு பேறு அருளியது என்றால் நான் எவ்வளவு புண்ணியம் செய்து இருப்பேன்' என்று, வாலி தன் உயிர் நீக்கும் தருவாயில் குறிப்பிடுகிறான். ராமன் புத்தி சுவாதீனம் இழந்தவன் என்றால், அவனிடம் தன் மகன் அங்கதனை எப்படி வாலி ஒப்படைத்து இருப்பான்? வாலி தன், 'உடன் பிறப்பு' பாசத்தால் தன் சகோதரன் சுக்ரீவனை, ராமனிடம் எப்படி ஒப்படைத்து இருப்பான்? வைரமுத்து பதில் சொல்ல வேண்டும். திட்டமிட்டு திராவிட மாடல் அரசின் விருதுகளையும், அரசு சுகங்களையும் ஆரம்ப காலம் தொட்டு தற்போது வரை அனுபவித்து வரவே, சர்ச்சை கருத்துக்களை, வைரமுத்து பேசி இருக்கிறார். ஒரு சொல், ஒரு இல், ஒரு வில் என்று வாழ்ந்த ராமனை, இந்த மூன்று வார்த்தைக்கும் பொருத்தமில்லாத ஒருவர் பேசுவது நல்லதல்ல. அகங்கார எண்ணத்தோடு, அலங்கார எழுத்துக்களோடு, வார்த்தை ஜாலங்களில் வன்மத்தை புகுத்துவது சரியல்ல. 'ஆண்டாள் பெரியாழ்வாருக்கு பிறந்த பெண் இல்லை. ஆதலால் அவள் பிறப்பு குறித்து, ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும் குலம் அறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள, சாதிக்கட்டுமானம் உள்ள சமூகம் தயங்கி இருக்கலாம் என்பதாலும், அரசும், சமூகமும் அங்கீகரித்ததாலும், கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்கு சில ஆய்வாளர்கள் ஆட்படுகின்றனர் என, அமெரிக்காவில் சமர்ப்பிக்கப்படாத ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டு பேசி இருக்கிறார் வைரமுத்து. மேலும், 'ராமன் அணில் முதுகில் தடவியதால் மூன்று கோடுகள் இருக்கிறது. சீதை முதுகில் எத்தனை கோடுகள் இருக்கிறது?' என்று, கயமைப் பேச்சும் பேசியவர் இவர். பிற மத கடவுளர்களை, வழிபாட்டு முறையினரை, வைரமுத்து வசை மாரி பொழிந்ததாக இதுவரை எந்த வரலாறும் இல்லை. தமிழக முதல்வர் விருது கொடுத்த மேடையில், ராம பெருமானை குற்றவாளி என்றும், புத்தி சுவாதீனம் இழந்தவன் என்றும் பேசியதை, தி.மு.க., அரசோ, விழா ஏற்பாட்டாளர்களோ, பிற கட்சியினரோ இதுவரை கண்டித்ததாக தெரியவில்லை. தமிழக சட்டத்துறை அமைச்சர், தி.மு.க.,வைச் சேர்ந்த ரகுபதி, புதுக்கோட்டை கம்பன் கழக விழாவில் பேசுகிறார்... 'கம்பராமாயணத்தை உற்று நோக்கி பா ர்க்கையில், சமத்துவம், சமூக நீதி - எல்லாருக்கும் எல்லாம் - நாம் அனைவரும் அண்ணன் தம்பிகள் - நமக்குள் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை கம்ப ராமாயணம் சொல்லுகிறது. 'பரசுராமன், பலராமன், கிருஷ்ணன், ராமன் என பல அவதாரங்கள் இருந்தாலும், மனித அவதாரமாக ராம அவதாரம் இருக்கிறது. ஈ.வெ.ரா., அண்ணா, அம்பேத்கர் ஆகியோருக்கு முன்பே, சமூக நீதியை இந்த மண்ணில் தந்தது ஸ்ரீ ராமர்' என்று குறிப்பிடுகிறார். இதற்கு வைரமுத்து என்ன சொல்லப் போகிறார்? தமிழக அமைச்ச ர் கே.என்.நேரு, மதுராந்தகம் ஏரி காத்த ராமர் திருக்கோவிலுக்கு 20 லட்சம் ரூபாய் பொருட்செலவில், தன் காணிக்கையாக கொடி மரத்தை அமைத்து தருகிறார். தமிழ்நாட்டில், ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாக மேற்பார்வையின் கீழ், எத்தனை ராமர் திருக்கோவில்கள் இருக்கின்றன! அத்தனை ராமர் தெய்வங்களை வணங்கக்கூடிய பக்தர்களை அவமதித்து பேசிய வைரமுத்துவுக்கு எதிராக, இதுவரை அமைச்சர் சேகர்பாபு வாய் திறக்காதது ஏன்? சைவ சமய, வைணவ சமய மற்றும் பிற வழிபாட்டு முறையை பின்பற்றக்கூடிய ஹிந்துமத ஆதீனங்கள், ஜீயர் பெருமக்கள், ஆன்றோர், சான்றோர், துறவியர் யாருமே, வைரமுத்துவுக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கை கூட தெரிவிக்காதது பெரும் வேதனை தருகிறது. 'ராமன் ஒரு குடிகாரன், ராமன் எந்த இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்தான், அவன் எப்படி ராமர் பாலம் கட்டினான்?' என்று, முன்பு கருணாநிதி பேசிய போது, கருணாநிதிக்கு எதிராக, தமிழகத்தில் இருந்த போராட்டக்களம் இப்பொழுது, வைரமுத்துவுக்கு எதிராக இல்லாதது ஏன்? நாடாண்ட ராமன் கானகம் செல்ல வேண்டும், பதவியை பரதனிடம் ஒப்படைத்து செல்ல வேண்டும் என்ற போது, அன்று மலர்ந்த தாமரை மலர் போல முகம் மாறாது, அரச பதவியை விட்டுக் கொடுத்து, கானகம் சென்றவன் கருணை வடிவம் ராமன்! அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்ட அயோத்தி ராமன் குறித்து அவதுாறு பேசிய வைரமுத்து மீது, தமிழக அரசு வழக்கு பதிவு செய்ய வேண்டும். பக்தி படைத்த ஹிந்துக்கள் சக்தி படைத்தவர்களாக மாறினால், ஹிந்து மதத்தி ற்கு எதிராக பேசும் இதுபோன்ற மனிதர்கள் பேசாதிருப்பர். -ராம ரவிகுமார் - ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர். போன்: 96553 65696.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சீவிலபாண்டி
ஆக 17, 2025 12:22

இந்த விழா ஏற்பாடு செய்தே திராவிட கட்சிகள் தான் எப்படி எதிர்பார்கள். சிறுபான்மையினர் பிச்சை போடும் ஓட்டுக்காக இனி பல விழாக்கள் நடைபெறும்.


Oviya Vijay
ஆக 17, 2025 10:14

நான் பலமுறை சங்கிகளைப் பார்த்து கேட்க வேண்டுமென நினைத்த தலைப்பு இது... திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்... வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்...


vivek
ஆக 17, 2025 13:03

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் உனக்கு....அதுதாண்ட வளர்ச்சி.....இது எப்படியிருக்கு...


Kuna
ஆக 17, 2025 05:59

Dinamalar Editor team, dare you to make any comments on ruling party of TN ministers , MLAs and party members those Who are always direct attack on religion of our belief? do you have anu Guts? do you have any ball to ask in your newspaper?


சிட்டுக்குருவி
ஆக 17, 2025 04:47

அரசியலில் நெருக்கடிகள் வரும்போது மக்களின் மனதை திசைதிருப்ப இதுபோன்ற கைக்கூலிகளை ஏவிவிடுவார்கள் .அவர்கள் இதை கனகச்சிதமாக செய்துமுடிப்பார்கள் .மக்களின் மனது புண்படுத்துவதில் அவர்களுக்கு ஒரு சிற்றின்பம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை