உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருவண்ணாமலையில் நிலச்சரிவுக்கு காரணம் என்ன?

திருவண்ணாமலையில் நிலச்சரிவுக்கு காரணம் என்ன?

திருவண்ணாமலையில் சில இடங்களில், கனமழையால் மேற்பரப்பு மண் அடுக்குகள் குழைந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டதாக, பேரிடர் மேலாண்மை துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.வங்கக்கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல், நவம்பர், 30ல் கரையை கடந்தது. இதன் காரணமாக, புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில், வ.உ.சி., நகர் பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. மண் சரிவு, வெள்ளம் காரணமாக வீடுகள் புதைந்ததில், ஐந்து குழந்தைகள் உள்ளிட்ட, ஏழு பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.பொதுவாக இமயமலையை ஒட்டிய பகுதிகளில் தான், மழை காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடராக பார்க்கப்பட்டது.தமிழகத்தில் நீலகிரியில், அதி கனமழை காலங்களில் நிலச்சரிவு சம்பவங்கள் நடந்துள்ளன. கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளிலும், சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டது என்ற தகவல், பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதியில் உயிரிழப்பு ஏற்படுத்தும் அளவுக்கு நிலச்சரிவு வருமா என்பது, இன்னும் நம்ப முடியாததாகவே உள்ளது.

எப்படி நடந்தது?

இதுகுறித்து, கட்டுமான அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: கடந்த காலங்களில், அதிக நிலச்சரிவு சம்பவங்கள் ஏற்பட்டதால், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், 'ரிடெய்னிங் வால்' எனப்படும், தடுப்பு சுவர் அமைக்க, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில், தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.மலைகளில், 45 டிகிரி கோணத்துக்கு மேலான சாய்வு பகுதிகளில், கட்டுமான திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், திருவண்ணாமலை, சேலம் ஆத்துார் போன்ற பகுதிகளில், மலைகளில் அனுமதி இல்லாத கட்டடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 45 டிகிரி சாய்வு தளம் என்ற கட்டுப்பாடுகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், கட்டடங்கள் கட்ட கூடாத பகுதிகள் எவை என்பதை, அரசு வெளிப்படையாக அறிவித்தால், பல்வேறு துறையினரும், பொது மக்களும் ஓரளவுக்கு விழிப்புடன் செயல்பட முடியும்.மலையின் சரிவுகளில் தடுப்பு சுவர் அமைத்து, அதன்பின் கட்டடம் கட்டப்பட்டால், நிலச்சரிவுகளை ஆரம்ப நிலையிலேயே தடுக்க வாய்ப்பு இருக்கும். திருவண்ணாமலையில் கடந்த பல ஆண்டுகளில், இந்த அளவுக்கு அதி கனமழை பெய்தது இல்லை. எனவே, இதுபோன்ற பாதிப்புகள் வரும் என்பதையே யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பிட்ட சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் போது, மண் அடுக்குகள் கரைய வாய்ப்புள்ளது. மண் அடுக்கு கரையும் போது, சிறு பாறைகளும் சரியும். இதை சமாளிக்க முடியாத சிறிய கட்டடங்கள் புதையும் அபாயம் உள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகாவது, திருவண்ணாமலை போன்ற மலைகளில், புதிய கட்டடங்கள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும். தடுப்பு சுவர் முறையை கட்டாயப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மண் அடுக்கில் நடந்தது என்ன?

சென்னை அண்ணா பல்கலையின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ஆ.ராமச்சந்திரன் கூறியதாவது:மலைப்பகுதிகளில், 40 செ.மீ.,க்கு மேல் மழைப்பொழிவு இருந்தால், அப்பகுதியில் தண்ணீர் வெளியேறுவதில் பிரச்னை ஏற்படும். இதில், தாய் பாறை அடுக்கு மேற்பரப்பாக இருந்தால் பிரச்னை இல்லை.ஆனால், திருவண்ணாமலை போன்ற இடங்களில், தாய் பாறையின் மேல் அதிக இறுக்கம் இல்லாத மண் அடுக்குகளே காணப்படுகின்றன. இதில், குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்தால், அதனால் ஏற்படும் வெள்ளம், மண் அடுக்குகளை குழைய செய்து விடும்.இவ்வாறு மேற்பரப்பில் உள்ள மண் அடுக்குகளில் குழைவு தன்மை ஏற்பட்டால், நீரின் அழுத்தம் காரணமாக நிலச்சரிவு ஏற்படும். சிறிய கட்டடங்களால் இதை எதிர்த்து நிற்பது சாத்தியமில்லை. எந்த பகுதியிலும், எப்போது வேண்டுமானாலும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதை, மக்கள் உணர்ந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
டிச 04, 2024 21:52

இ.பி.எஸ் சைக் கேட்டால் விடியா தி.மு.க அரசுதான் காரணம்னு சொல்லுவாரு. அண்ணாமலையைக் கேட்டா சாத்தனூர் அணையை தூர்வாராததுதான் காரணம்பாரு. பா.ஜ வடக்ஸ் ஆளுங்க நேரு தான் காரணம்பாங்க. பூமியில் நிரந்தரமானதுன்னு எதுவும் கிடையாது. எல்லாம் அழியும். ஒரு நாள் காணாமப் போகும்.


Jagan (Proud Sangi)
டிச 04, 2024 19:57

மலை மேலயே வீடு கட்டுறாங்க. இவ்ளோ கிட்ட வீடு கட்ட லஞ்சம் குடுத்து அனுமதி பெறுகிறார்கள்


வைகுண்டேஸ்வரன்
டிச 04, 2024 16:45

சென்னை I. I. T. யிலிருந்து ஒரு வல்லுநர்கள் குழு காரணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இங்கே பல மேதாவிகள் கண்டுபிடித்து கருத்து போடுகிறார்கள். ஒருத்தர் சிவன் நெற்றிக்கண் திறந்து விட்டார் என்று எழுதி, இந்துக்கள் கடவுளை அவமதிக்கிறார். ஏன் பாஜக வாசகர்களுக்கு கோபம் வரவில்லை? நெற்றிக்கண் திறந்தால் நெருப்பு தானே வரும்? தண்ணீர், l mean மழை வெள்ளம் வருமா?


Krishnamurthy Venkatesan
டிச 04, 2024 15:06

எந்த அரசாக யாருடைய அரசாக இருந்தாலும், பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படா வண்ணம் அல்லது தகுந்த நடவடிக்கையால் பாதிப்பு குறையும் வண்ணம், செயல்படுவதில்லை. தற்காலிகமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி, ரேஷன் சாமான்கள் கொடுத்தால் போதும் என்ற மனப்பாண்மையுடன் செயல்படுகிறார்கள். நிரந்தரமான தீர்வை கொடுக்க தவறுகிறார்கள். வருமுன் காப்போன் என்று அரசு திகழ வேண்டும்.


sankar
டிச 04, 2024 13:19

அங்கேயெல்லாம் வீடுகட்ட அனுமதித்தது அரசுகளே - அவைதான் பொறுப்பேற்கவேண்டும்


nv
டிச 04, 2024 09:29

சனாதன எதிர்ப்பின் விளைவு? கடவுள் நின்று கொல்லும். "குடும்ப" தலைமுறைகள் நாசமாகும் .. இது அருணாச்சலேஸ்வரர் சொல்லும் செய்தி!!


அப்பாவி
டிச 04, 2024 13:27

அப்போ ஜோஷி மட்டில் வந்த நிலச்சரிவு? வயநாட்டில் நிகழ்ந்தது? பிஹாரில் நிகழ்ந்த பால உடைப்புக்கள்? கொரமாண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து? சனாதன ஆதரவு நிலச்சரிவா? நீங்களும்.உங்க லாஜிக்கும்.


VENKATASUBRAMANIAN
டிச 04, 2024 08:11

இவர்களிடம் ஒரு திட்டமும் இல்லை. காசு கொடுத்தால் போதும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.


அருணாச்சலம்
டிச 04, 2024 05:45

சிவன் நெற்றிக்ண்ணை திறந்துட்டார்னு பதிவுகள் வருது.


முக்கிய வீடியோ