கரூரில் அழுதது ஏன்: அமைச்சர் மகேஷ் பதில்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மதுரை: ''முதலில் நாம் மனிதர்கள்; ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதன், தன்னை மனிதனாக நினைக்க மறந்து விட்டான்,'' என, கரூரில் தான் அழுததை விமர்சனம் செய்தவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பதிலளித்துள்ளார். மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் 'தமிழ் முழக்கம்' மேடைப்பேச்சு, ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து, அமைச்சர் மகேஷ் பேசியதாவது: நமக்கான வாழ்வின் பல்வேறு கருத்துகளை திருக்குறளில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரசியல் என்றாலே நச்சு; நச்சு குணம் கொண்டவன் தான் அரசியல்வாதி என்ற பேச்சு உண்டு. நம்மை சுற்றிலும் அறிவார்ந்த, ஆற்றல்மிக்க அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். புத்தகம் படிப்பதைத் தாண்டி பேச்சுக்கலையை வளர்க்க நகைச்சுவை திறன் அவசியம். கிராமத்தில் 'வாயுள்ள பிள்ளை பிழைக்கும்' என்ற பழமொழி உண்டு; ஆனால் வாயுள்ள பிள்ளைக்கு பகுத்தறிவு வந்தால், தன்னோடு சமூகத்தையும் சேர்த்து பிழைக்க வைக்கும் ஆற்றல் வரும். இவ்வாறு அவர் பேசினார். விழாவிற்கு பின் அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: கரூரில் நெரிசலில் 41 பேர் இறந்தனர். சோக உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன். உடனே, சமூக ஊடகங்களில் என்னை வைத்து ஏராளமான கேலி, விமர்சனம் செய்தனர். அறிவு அதிகமாகி, உணர்ச்சிகள் குன்றியிருந்தால், ஒவ்வொரு மனிதனும் மரத்திற்கு சமம். உணர்ச்சி அதிகமாகி, அறிவு குன்றியிருந்தால் விலங்கிற்கு சமம் என வள்ளுவர் கூறியுள்ளார். முதலில் நாம் மனிதர்கள்; ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதன், தன்னை மனிதனாக நினைக்க மறந்து விட்டான். இவ்வாறு அவர் கூறினார்.