உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிம் பயிற்சியாளர் கொலையில் 4 பேர் கைது: கலவரத்தில் வீடுகள் சூறை

ஜிம் பயிற்சியாளர் கொலையில் 4 பேர் கைது: கலவரத்தில் வீடுகள் சூறை

புதுச்சேரி : புதுச்சேரியில் ஜிம் பயிற்சியாளர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால், ஏற்பட்ட கலவரத்தில் 10 வீடுகள் சூறையாடப்பட்டதுடன், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.புதுச்சேரி, வம்பாக்கீரப்பாளையம், தெப்பக்குளம் வீதியை சேர்ந்தவர் வீரமணி மகன் விக்கி, 35: ஜிம் பயிற்சியாளர். இவரது உறவினர் இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது ஏற்பட்ட தகராறில், ஒரு கும்பல் அவர் மீது கற்களை வீசி தாக்கியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த விக்கி உயிரிழந்தார். இந்த தகராறில் விக்கியின் நண்பர் மூர்த்தி, படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

4 பேர் கைது

கொலை சம்பவம் குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, திப்புராயப்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன், 33; ஸ்ரீகாந்த், 28; வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த அசோக், 36; மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.

கலவரம்

கொலை செய்யப்பட்ட விக்கியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று திரண்டனர். கைதான நால்வரின் வீடுகள் உட்பட அப்பகுதியில் உள்ள 10 வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை, அடித்து நொறுக்கி சூறையாடினர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று பைக்குகள் மற்றும் ஒரு கார் சேதப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியே, கலவர பூமியாக மாறியது.

ஊர்வலம், மறியல்

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பாண்டி மெரினா, உப்பளம் செல்லும் சாலை, செஞ்சி சாலை மற்றும் ஆம்பூர் சாலைகளில் மரக்கிளைகளை வெட்டிப்போட்டு மறியலில் ஈடுபட்டனர்.ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். அப்போது போலீசாரிடம், ' விக்கியின் உடலை வாங்க மாட்டோம். கைதான நான்கு பேரும், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்கள். அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.ஜாமினில் வெளியே வர விடாமல், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கலெக்டர் வந்தால் தான் பேச்சு வார்த்தைக்கு வருவோம்' என, தெரிவித்தனர்.

எம்.எல்.ஏ., சமாதானம்

இந்நிலையில், துணை கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா ஆகியோரும் வந்தனர். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், போலீசாரிடம், கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி பொதுமக்களை சமாதானப்படுத்தியுதுடன், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாரை அறிவுறுத்தினார்.துணை கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், 'குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, ஜாமினில் வெளி வர முடியாதபடி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். காலையில் துவங்கிய கலவரம் மதியம் 12:00 மணியளவில் முடிவுக்கு வந்தது.

போலீஸ் குவிப்பு

விக்கியின் உடல், மதியம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விக்கியின் உடலை இன்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால், போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி