புதுச்சேரி:திண்டுக்கல், கொத்தனார் முதல் சந்தை சேர்ந்தவர் சந்திரசேகர், 60; நகை செய்யும் தொழிலாளி. இவர் மனைவி சரஸ்வதி, 55, மகன் சுதர்சன், 25, மகள் சவுந்தர்யா, 23, ஆகியோருடன் கடந்த, 7ம் தேதி இரவு, புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். அன்று இரவு புதுச்சேரி முத்து மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள, 'பீனிக்ஸ் ரெசிடென்சி' என்ற ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் அவர் அறையை, 'செக் அவுட்' செய்ய முயன்ற போது, கனமழை பெய்தது. அதனால் அறையை மேலும் ஒரு நாள் நீட்டித்து அங்கேயே தங்கினார். நேற்று, 'செக் அவுட்' நேரம் முடிந்ததால், பகல் 12:30 மணிக்கு, விடுதி ஊழியர்கள், சந்திரசேகர் தங்கியிருந்த அறைக்கதவை தட்டினர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், பெரிய கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று போலீசார் பார்த்தபோது, சந்திரசேகர், அவரது மனைவி, மகன் மற்றும் மகள் இறந்து கிடந்தனர். நான்கு பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.