உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் முதல் முறையாக நகராட்சியில் அருங்காட்சியகம்

புதுச்சேரியில் முதல் முறையாக நகராட்சியில் அருங்காட்சியகம்

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல் முறையாக நகராட்சி (மியூசியம்) அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.பிரெஞ்சு ஆட்சி காலத்தில் புதுச்சேரி கடற்கரை சாலையில் 1870ம் ஆண்டு மேரி கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 1880ம் ஆண்டு முதல் மேயர் லியோன்குவார் தலைமையில் நகராட்சி கவுன்சில் அலுவலகமாக துவங்கி, 93 ஆண்டுகள் இயங்கி வந்தது. புதுச்சேரி சுதந்திரம் அடைந்த பின், 1973ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நகராட்சி சட்டப்படி புதுச்சேரி நகராட்சி கட்டடமாக இது மாறியது. 144 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேரி கட்டடம் 2014ம் ஆண்டு இடிந்து விழுந்தது.இக்கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ், புதுச்சேரி திட்ட அமலாக்க முகமை மூலம் ரூ.14.83 கோடியில் 690 சதுர மீட்டரில் பிரதான கட்டடடம், தரைத் தளம், முதல் தளம், கருத்தரங்க கூடம், திருமண பதிவு அறை உள்ளிட்டவை பாரம்பரிய பழைய கட்டடப்பாணியில் கட்டப்பட்டுள்ளது.பத்தாண்டுகளுக்கு பிறகு நகராட்சி அலுவலக பயன்பாட்டிற்கு வந்துள்ள மேரி கட்டடத்தின் தரைதளத்தில் 1,800 சதுர அடியில் புதுச்சேரி நகராட்சி அருங்காட்சியகம் ஒன்று அமைக்கிறது. இதில், பிரெஞ்சு காலத்தில் மேரி கட்டடத்தில் இருந்த பிரான்ஸ் ஓவியர் 'பால் ப்ரூத் ஹான்' வரைந்த ஓவியத்தை நகலெடுத்து ஓவியர் 'ஏ ப்ரூத்' வரைந்த (ஜஸ்டிஸ்) நீதி ஓவியத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாதிரி ஓவியம்.பயன்பாட்டில் இருந்த பழைய பொருட்கள், பிறப்பு, இறப்பு, திருமண பதிவு, சுதந்திர போராட்ட ஆவணங்கள், பழங்கால எட்டு அடி உயர சுவர் கடிகாரம், ஆயி மண்டபம் மற்றும் முத்திரப்பாளையத்தில் இருந்து அந்தக்காலத்தில் புதுச்சேரிக்கு குடிநீர் அனுப்பிய நீரேற்றும் கருவியின் மினியேச்சர் வடிவங்கள் உள்பட ஏராளமான பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன.இதற்கான பணிகளை வேகமாக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

சுவர் கடிகாரம் பராமரிப்பு

புதுச்சேரி நகராட்சி கட்டடத்தில் பத்தடி அகலம், ஒன்பதடி நீளத்தில் அமைக்கப்பட்டு இருந்த நுாறாண்டு பழமை வாய்ந்த ஜஸ்டிஸ் ஓவியத்தின் அசல் நிரந்தரமாக புதுச்சேரி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் நகலே புதுச்சேரி நகராட்சி அருங்காட்சியகத்தில் அமைக்கப்படுகிறது. அதே போன்று முத்திரப்பாளையம் நீரேற்று நிலையத்தின் பழங்கால கருவிகள் நகராட்சியின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, இதன் மினியேச்சர் வடிவங்களே காட்சிப்படுத்த உள்ளன. சுவர் கடிகாரத்தை பராமரிப்பதற்காகவே முதலில் தந்தை அதன்பின் அவர் மகன் என்று இரண்டு தலைமுறையை சேர்ந்தவர்கள் நகராட்சி பணியில் இருந்து உள்ளனர்.தற்போது ஓய்வு பெற்ற பின்பும் அவரை அந்த கடிகாரத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ