| ADDED : ஜூலை 31, 2024 04:14 AM
புதுச்சேரி : புதுச்சேரி அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், அக்கட்சியினர் முதல்வர் ரங்கசாமியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;கடந்த ஆண்டு 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 100 சதவீத பட்ஜெட்டில் 21.92 சதவீதம் சம்பளத்திற்கும், 12.53 சதவீதம் பென்ஷனுக்கும், 15.95 சதவீதம் கடன் மற்றும் வட்டிக்கும், 14.57 சதவீதம் மின்சாரத்திற்கும், 16 சதவீதம் முதியோர் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்காகவும், 3 சதவீதம் உயர் கல்விக்கும், 9.39 சதவீதம் கூட்டுறவு மானியம் என வருவாய் செலவினங்களுக்காக 93.36 சதவீதம் போக, மீதமுள்ள 6.64 சதவீதம் மூலதன செலவினங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டது.உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட வருவாய் செலவினங்களுக்கு குறைந்தது 15 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வரும் பட்ஜெட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் அமைத்தல், அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பஞ்சாலைகளை திறப்பது, தொழில் நுட்ப பூங்கா அமைப்பது போன்ற வேலைவாய்ப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை குடும்பங்களுக்கு, இலவச இன்வெர்ட்டர் வழங்கிட வேண்டும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும், தரம் உயர்த்திட வேண்டும். புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி ஏற்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்து செயல்படுத்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.