உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணப்பட்டு ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமிப்பால் பாதிப்பு

மணப்பட்டு ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமிப்பால் பாதிப்பு

பாகூர்: மணப்பட்டு தாங்கல் ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளால், நீர் வாழ் உயிரினங்களும், பறவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.பாகூர் - கன்னியக்கோவில் சாலையில், மணப்பட்டு தாங்கல் ஏரி உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலமாக அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.இந்த ஏரியில் , நீர் காகம் நீர் கோழி உள்ளிட்ட ஏராளமான பறவையினங்களின் வசிப்பிடமாகவும் திகழ்ந்து வந்தது. பொதுப் பணித்துறை நீர்பாசன பிரிவின் பராமரிப்பில் இருந்து வரும் இந்த ஏரி, பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது.இதனால், ஏரியின் மதகுகள், உபரி நீர் வெளியேறும் பகுதியில் உடைந்து தண்ணீர் விணாக வெளியேறி வருவது தொடர் கதையாக உள்ளது. ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளதால், நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. நீர்பரப்பு முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால் தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டு ஒலிச்சேர்க்கை நடைபெறுவது தடுக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வாழும் மீன், நண்டு, நத்தை போன்ற நீர்வாழ் உயிரினங்களும், பறவையினங்களும் அழிவை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.ஏரி துார்ந்து போன நிலையில், ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால், ஏரியில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், விவசாயத்திற்கு பாசன நீர் கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, மணப்பட்டு தாங்கல் ஏரியில் ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்தி, துார்வாரி முறையாக பராமரித்திட பொதுப்பணித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ