புதுச்சேரி : விஷவாயு தாக்கியதன் எதிரொலியால் ரெட்டியார்பாளையம் புது நகரில் அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.ரெட்டியார்பாளையம், புதுநகர் 4வது குறுக்கு தெருவில், பாதாள சாக்கடையில் உருவான விஷவாயு கழிவறை வழியாக வெளியேறியதால், மூன்று பேர் உயிரிழந்தனர். விஷ வாயு தாக்கம் காரணமாக நேற்று முன்தினம் புதுநகர் 4, 5 மற்றும் 3வது தெருவில் இருந்து வெளியேறிய மக்கள் நேற்றும் வீடு திரும்பவில்லை. கழிவறை வழியாக மீண்டும் விஷவாயு வருமோ என்ற அச்சம் காரணமாக வெளியூர்களில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர். வெறிச்சோடிய தெரு
இதனால் புதுநகர் தெருக்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. விஷவாயு தாக்கம் காரணமாக புதுநகர் 6வது தெருவில் உள்ள அரசு தொடக்க பள்ளி மற்றும் மாதா கோவில் எதிரில் உள்ள இமாகுலேட் அரசு நிதி உதவி உயர்நிலை பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.பொதுமக்கள் தங்குவதிற்கு தயாராக தொடக்க பள்ளி தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. தற்காலிக கழிவறை
புதுநகர் பகுதியில் நேற்று முன்தினம் முதல் வீடுகளில் உள்ள கழிவறைக்கு செல்ல பொதுமக்கள் அச்சப்படுவதாக புகார் தெரிவித்தனர். இதனால் உழவர்கரை நகராட்சி மூலம் தற்காலிக கழிவறை ஒன்று அரசு தொடக்க பள்ளி அருகே நிறுவப்பட்டது. மருத்துவ முகாம்
புதுநகர் முழுதும் நேற்று 2வது நாளாக இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி டாக்டர் வினோத் தலைமையிலான குழுவினர் வீடு வீடாக சென்று யாருக்கேனும் பாதிப்பு உள்ளதா என ஆய்வு செய்ததுடன், ஒலி பெருக்கி மூலம் அழைப்பு விடுத்தனர். மூச்சு தினறல், தலைவலி, கண் எரிச்சல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறி இருந்தால், உடனடியாக சிகிச்சை அளித்தனர். தீவிர சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது. உணவு வழங்கல்
விஷவாயு தாக்கத்தால், புதுநகர் பகுதியில் மக்கள் பதற்றத்துடன் உள்ளனர்.இதனால், புதுநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த்துறை பேரிடர் மேலாண்மை துறை மூலம் நேற்று முன்தினம் மதியம் முதல் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று காலையும் அப்பகுதியில் உணவு வழங்கப்பட்டது.