மணக்குள விநாயகர் தங்க கவசத்தில் அருள்பாலிப்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியொட்டி, மணக்குள விநாயகர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று காலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தங்க கவசம் அணிவித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரித்த மேடையில் அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்வதற்காக சிறப்பு தரிசனம், அர்ச்சனைகள் ரத்து செய்யப்பட்டது.தடுப்பு கட்டைகள் அமைத்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதல் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். காலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1:30 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. பின்பு மதியம் 3:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.