| ADDED : மே 03, 2024 06:30 AM
வில்லியனுார் : வில்லியனுார் அருகே டேங்க் ஆபரேட்டரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததால், கிராமத்திற்கு குடிநீர் வினியோகத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் பேட்டில் புதுச்சேரி பொதுப்பணித்துறையின் கீழ் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இதன் மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று முன் தினம் மாலை 5:00 மணியளவில் கூடப்பாக்கம் பேட்டை சேர்ந்த மூன்று இளைஞர்கள் அத்துமீறி மேல்நிலை குடிநீர் தொட்டி மீது ஏறினர்.அப்போது பணியில் இருந்த டேங்க் ஆபரேட்டர்கள் சந்தோஷ், மோகன் ஆகியோர் அவர்களை கீழே இறங்குமாறு கூறினர். கீழே இறங்கிய நபர்கள் டேங்க ஆப்ரேட்டர்களிடம் வாக்குவாதில் ஈடுபட்டு, சந்தோைஷ தாக்கி, மறைத்து வைத்திருந்த கத்தியை அவரது கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர். வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். பொதுமக்கள் ஓடிவந்ததும், மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இதனால் ஆபரேட்டர்கள் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யமறுத்து, டேங்கை பூட்டிவிட்டு, குடிநீர் பிரிவு இளநிலை பொறியாளரிடம் நடந்த சம்பவத்தை கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆபரேட்டர்கள் அடிக்கடி இதுபோன்று இளைஞர்களால் தாக்கப்படுவதால், இப்பகுதியில் வேலை பார்க்க யாரும் முன் வருவதில்லை.இது குறித்து இளநிலை பொறியாளர் திருவேங்கடம், வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சப் - இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்கு பதிந்து, டேங்க் ஆபரேட்டர்களை தாக்கிய கூடப்பாக்கம்பேட் ஆகாஷ், காமேஷ், பிரவீன் ஆகியோரை தேடி வருகின்றனர். இதனிடையே போலீஸ் பாதுகாப்புடன் ஆபரேட்டர்களை வரவைத்து இரவு 9:00 மணிக்கு மேல் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.