உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் என்.ஆர்.காங்., கட்சியை பா.ஜ., விழுங்கி விடும் - அ.தி.மு.க., கருத்து 

புதுச்சேரியில் என்.ஆர்.காங்., கட்சியை பா.ஜ., விழுங்கி விடும் - அ.தி.மு.க., கருத்து 

புதுச்சேரி: புதுச்சேரியில் விரைவில் ஆளும் பா.ஜ., கட்சி, என்.ஆர்.காங்., கட்சியை விழுங்கி விடும் என அ.தி.மு.க., தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது; முதல்வர், அமைச்சர், சபாநாயகர், எம்.எல்.ஏ.க்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் சில நெறிமுறைகள் உள்ளது. ஆனால் சபாநாயகர் செல்வம், சட்டசபை கூட்டம் துவங்கும் என அறிவித்த பின்பு, சட்டசபையில் அறிவிக்க கூடிய அரசு திட்டங்களை முன்கூட்டியே அறிவித்து அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார். சட்டசபை கட்டப்படும் என இதுவரை 63 முறை கூறிவிட்டார். ஆனால், மத்திய அரசு அத்திட்டத்திற்கு அனுமதியோ, நிதியே வழங்கவில்லை. பாலம் கட்டுவதிற்கும், நுாறுறுநாள் வேலை, பட்ஜெட்டிற்கு அனுமதி பெற்று தருவதாக சபாநாயகர் கூறுவது அவரது பதவிக்கான மாண்புக்கு அழகல்ல. அவர் துறை அமைச்சர் கிடையாது. சட்டசபை கூடும் தேதி அறிவித்த பின்பு, இடைப்பட்ட காலத்தில் எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படாது. ஆனால், இலவச அரிசி திட்டத்திற்கு ரூ. 270 கோடிக்க, கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார் என்ற அறிவிப்பை சபாநாயகர் வெளியிடுகிறார். சபாநாயகர் தனது எல்லையை மறந்து ஆர்வமிகுதியில் பல அறிவிப்புகளை வெளியிட்டு, நிழல் முதல்வர் போல செயல்படுகிறார். வெகு விரைவில் பா.ஜ., கட்சி, என்.ஆர்.காங்., கட்சியை விழுங்கி விடும். அதற்கு முன்னதாக முதல்வர் விழித்து கொள்ள வேண்டும். அமைச்சர்களின் துறை சம்பந்தப்பட்ட பல அறிவிப்புகளை முன்கூட்டியே சபாநாயகர் அறிவிப்பது, அமைச்சர்களின் உரிமையில் குறுக்கிடும் செயல். இத்தகைய நிகழ்வு சட்டசபை ஜனநாயகத்திற்கும், அரசு நிர்வாகத்திற்கும் சரியானது இல்லை. இது தொடர்பாக கவர்னரிடம் புகார் தெரிவிக்கப்படும் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ