உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கார் மீது பஸ் மோதி விபத்து: பெண் பலி; 3 பேர் படுகாயம்

கார் மீது பஸ் மோதி விபத்து: பெண் பலி; 3 பேர் படுகாயம்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கார் மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில், காரில் சென்ற பெண் இறந்தார். 3 பேர் படுகாயத்துடன் தப்பினர்.விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் பைபாஸ் சந்திப்பில், புதிய மேம்பாலம் கட்டப்பட்டு இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. சென்னை - திருச்சி மார்க்க வாகனங்கள் மேம்பாலத்தின் மேலே உள்ள இரண்டு பிரிவு சாலையில் செல்கின்றன. விழுப்புரம் - திருச்சி மார்க்க வாகனங்கள் பாலத்தின் கீழே இறங்கி செல்கிறது. பாலம் பணிகள் நடப்பதால், அடிக்கடி ஒருவழிப் பாதையாக மாற்றி வாகனங்களை ஒரே சாலையில் அனுப்புகின்றனர்.இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, சவேரியார்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ரபேன் மனைவி ஜெயராணி, 50; அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் மிலிக்கல் மகன் ராஜா,28; முப்பையூர் வெளியானந்தலைச் சேர்ந்த மகிமைராஜா, 55; அவரது மனைவி சபரிஅம்மாள், 50; ஆகிய 4 பேரும், வெளிநாட்டிலிருந்து வந்த தனது உறவினரை அழைத்து வருவதற்காக, நேற்று முன்தினம் இரவு தேவகோட்டையிலிருந்து மாருதி சுசிகி காரில் சென்னை விமான நிலையம் சென்றனர்.காரை ராஜா ஓட்டினார். நேற்று அதிகாலை 2:30 மணியளவில், விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் பை பாஸ் மேம்பாலம் அருகே வந்தபோது, எதிரே சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் சுற்றுலா சொகுசு பஸ், கார் மீது மோதியது.இந்த விபத்தில், ஜெயராணி சம்பவ இடத்திலேயே இறந்தார். மகிமை ராஜா, சபரிஅம்மாள், ராஜா ஆகியோர் படுகாயமடைந்தனர்.தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேம்பாலத்தின் மீது நடந்த விபத்தால், சென்னை - திருச்சி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. விபத்து குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஜானகிபுரம் புதிய பைபாஸ் பாலத்தில், திடீரென ஒரே சாலையில், வாகனங்களை திருப்பி விட்டதால், விபத்து ஏற்பட்டதாகவும், இதுபோன்று அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்