உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏ.எப்.டி., மைதானத்தில் பஸ் நிலையம்; அடிப்படை வசதியின்றி பயணிகள் அவதி

ஏ.எப்.டி., மைதானத்தில் பஸ் நிலையம்; அடிப்படை வசதியின்றி பயணிகள் அவதி

புதுச்சேரி : புதுச்சேரி ஏ.எப்.டி மைதானத்தில், தற்காலிகமாக பஸ் நிலையம் நேற்று முதல்செயல்பாட்டிற்கு வந்த நிலையில், அங்கு போதிய வசதிகள் செய்து தராததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.புதுச்சேரியில், 'ஸ்மார்ட்' சிட்டி திட்டத்தின் கீழ், ரூ.31 கோடி செலவில், புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து பஸ் நிலையம் தற்காலிமாக ஏ.எப்.டி., மைதானத்திற்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தேர்தல் காரணமாக பஸ் நிலைய இடமாற்றம் தள்ளிப்போனது. தற்காலிக பஸ்நிலையத்தில், அடிப்படை வசதிகள் முழுமையடைந்த பின், இடமாற்றம் செய்யும் நடவடிக்கை தீவிரமானது. இதனை தொடர்ந்து, நகராட்சி அறிவித்தபடி, நேற்று காலை முதல், ஏ.எப்.டி., மைதானத்தில், தற்காலிக பஸ்நிலையம் செயல்பட துவங்கியது.

போக்குவரத்து மாற்றம்

கடலுார் மார்க்கமாக, செல்லும் பஸ்கள்,புதுச்சேரி - கடலுார் சாலையில், இடதுபுறம் திரும்பி சென்றன. முதலியார்பேட்டை ரயில்வே மூடப்பட்டிருக்கும் சமயத்தில், கடலுார் மார்க்க பஸ்கள்,கடலுார் சாலையில் வலதுபுறம் திரும்பி, மறைமலை அடிகள் சாலையில் இடதுபுறம் திரும்பி, இந்திரா சதுக்கம சென்று, 100 அடி சாலை வழியாக சென்றன.சென்னை, திண்டிவனம், விழுப்புரம் மார்க்க பஸ்கள், புதுச்சேரி - கடலுார் சாலையில், இடதுபுறம் திரும்பி சென்றன. காத்திருக்கும் நேரத்தில் உள்ள பஸ்கள்,மறைமலை அடிகள் சாலையில், வெங்கடசுப்பா ரெட்டி சதுக்கம் அருகில் உள்ள பழைய திருவள்ளுவர் பஸ்நிலையத்தில் நிறுத்தி, அவரவர் நேரத்திற்கு ஏற்றார்போல, தற்காலிக பஸ்நிலையத்திற்கு சென்றன.

பயணிகள் தவிப்பு

சுற்றுலா நகரம் என்பதால், வார இறுதி நாட்களில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான, சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். ஆனால் பஸ் நிலையம், ஏ.எப்.டி மைதானத்திற்கு தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக, புதிய பேருந்து நிலையத்தில் தமிழில், மட்டுமே பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.தற்காலிக பஸ் நிலையத்தில், எந்த ஊருக்கு செல்லும் பஸ் என்பதை, தெரிவிக்கும் அறிவிப்பு பலகை எதுவும் இல்லை. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய, பஸ்கள் எங்கும் நிற்கும் என தெரியாமல் அலையும் நிலை உள்ளது. தற்காலிக பஸ் நிலையத்தின் மைய பகுதியில், பயணிகள் நிற்க, நிழற்கூரை அமைத்துள்ளனர். அது சிறியதாகவே உள்ளது. அதில் பயணிகள் அமர்வதற்கு இருக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் பஸ் ஏற வந்த முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள், அவதியடைந்தனர். குடிநீர் உள்பட, அடிப்படை வசதிகளும் முழுமையாக செய்து தரப்படவில்லை. அதிகாரிகள் இதில் அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என, பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.கடலுார் சாலையில் ரயில்வே கேட் மூடப்பட்ட போது, இருபுறமும் சாலையில், வாகனங்கள் அணி வகுத்து நின்றன. தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியேறும் பகுதி வரை வாகனங்கள் நின்றதால், அங்கிருந்து பஸ்கள் வெளியே வர முடியாமல் நின்றன.அதேநேரத்தில், கடலுார் சாலை வழியாக மற்ற வாகனங்களும் சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் நெரிசலை சீர் செய்தனர். இருந்தாலும் ரயில்வே கேட் மூடப்படும் போதெல்லாம், வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டே சென்றனர்.

அதிகாரிகள் ஆய்வு

இந்த பஸ் நிலைய சாலையானது, மண் சாலையாக உள்ளது. அதனால் பஸ்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது. மழை பெய்தால், தண்ணீர் தேங்குவதுடன், சாலை சேறும் சகதியாக மாற வாய்ப்புள்ளது. அதனால் இதுபோன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பயணிகள் சிரமமின்றி, பஸ் நிலையத்தை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதற்கிடையே, தற்காலிக பஸ்நிலையத்தில் நகராட்சி ஆணையர் கந்தசாமி, போக்குவரத்து எஸ்.பி செல்வம், ஆகியோர் நேற்று காலை பார்வையிட்டு, பயணிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வசதிகளை செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை