உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலி ஆன்லைன் வர்த்தகத்தில் தொழிலதிபரிடம் ரூ.92 லட்சம் அபேஸ்

போலி ஆன்லைன் வர்த்தகத்தில் தொழிலதிபரிடம் ரூ.92 லட்சம் அபேஸ்

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபரிடம் போலி ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ. 92 லட்சம் மோசடி செய்த சைபர் கிரைம் மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். தொழிலதிபர். ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழில் நடத்தி வருகிறார். இவரை கடந்த சில மாதங்களுக்கு முன் வாட்ஸ் ஆப்பில், தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வது தொடர்பான குரூப்பில் இணைத்தார். வாட்ஸ்ஆப் குழுவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வது குறித்து பெண் ஒருவர், இரண்டு நாள் வகுப்பு நடத்தினார். அதை நம்பிய முத்துகிருஷ்ணன், முதலில் 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தபோது, முதல் நாளில் 16 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. அதை நம்பி, அடுத்தடுத்து பல்வேறு தவணைகளாக 88 லட்ச ரூபாய் முதலீடு செய்தபோது, அவருக்கு 3 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்துள்ளதாக காட்டியது. பின், அந்த பணத்தை எடுக்க முயற்சி செய்தபோது, உங்களுக்கு லாபம் அதிகம் வந்துள்ளதால், ஜி.எஸ்.டி., வருமான வரி செலுத்தினால் தான் பணத்தை எடுக்க முடியும் தெரிவித்துள்ளனர். அதை நம்பி மீண்டும் 4 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்களுக்கு அனுப்பி உள்ளார். ஆனால், பணத்தை எடுக்க முடியவில்லை. அதன்பிறகே மோசடி கும்பலிடம் ரூ. 92 லட்சம் இழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா கூறுகையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 கோடி ரூபாய் அளவிற்கு போலியான ஆன்லைன் வர்த்தகத்தில் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்து இழந்துள்ளனர். இதுபோன்ற போலியான ஆப்களில் பணத்தை முதலீடு செய்து இழக்க வேண்டாம். நீங்கள் பணம் அனுப்புவதற்கு முன்பு அது உண்மையான வர்த்தக நிறுவனமான என உறுதி செய்துவிட்டு முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை