புதுச்சேரி: நீண்ட ஆண்டுகளாக 'பர்மிட்' புதுப்பிக்கப்படாமல், ஆட்டோ இயக்கும் அனைத்து டிரைவர்களும் வரும், 31ம் தேதிக்குள் புதுப்பித்து கொள்ளலாம்.இது குறித்து, புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் ஆட்டோ உரிமையாளர்கள், 'பர்மிட்' காலாவதி ஆன பிறகும், புதுப்பிக்காமல் வாகனங்களை இயக்குவதாக மாநில போக்குவரத்து ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.ஆட்டோ உரிமையாளர்கள் 'பர்மிட்' காலாவதி தேதிக்கு, 15 நாட்களுக்கு முன், புதுப்பிக்க, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது காலாவதியான அனுமதி சீட்டை புதுப்பிக்க தாமதத்திற்குரிய காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை விளக்கி, கூடுதல் கட்டணங்களோடு விண்ணப்பித்தால், ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.'பர்மிட்' காலம் காலாவதியாகி, 5, ஆண்டுகளுக்கு மேல் கடந்து சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள், போக்குவரத்து ஆணைய கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, புதுப்பிக்கப்படாமல் இருக்கும் அனைத்து ஆட்டோ 'பர்மிட்'டுகளை ஒரு முறை நடவடிக்கையாக புதுப்பித்து தர, போக்குவரத்து ஆணையம் முடிவு எடுத்துள்ளது.அதனால் நீண்ட ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் ஆட்டோ இயக்கும் அனைத்து டிரைவர்களும் வரும், 31ம் தேதிக்குள் தகுந்த ஆவணங்கள், காரணங்கள் மற்றும் கூடுதல் கட்டணத்தோடு புதுப்பித்துக்கொள்ளலாம்.வரும், செப்., முதல் தேதிக்கு பிறகு, 2 ஆண்டு கெடுவிற்கு உட்பட்ட 'பர்மிட்'டுகள் மட்டுமே, புதுப்பிக்கப்படும். 2 ஆண்டிற்கு மேல் புதுப்பிக்கப்படாதவைகள், ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.காலாவதியான 'பர்மிட்'டுகளை, தங்கள் அதிகார வரம்புகளில் உள்ள புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால் வட்டாரப்போக்குவரத்து அதிகாரி, மாகி மற்றும் ஏனாம் மாநில போக்குவரத்து ஆணைய துணை செயலாளர் அலுவலங்களில் விண்ணப்பிக்கலாம்.